ஆர்.கண்ணன் கதை, திரைக்கதை, வசனம் அமைத்து தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம், பூமராங். அதர்வா முரளி கதாநாயகனாக நடித்து ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் மேகா ஆகாஷ், இந்துஜா என இரு நாயகிகள் நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீ விபத்து ஒன்றில் தன் முகத்தை இழந்து விட்ட சிவாவுக்கு (அதர்வா) முகமாற்று அறுவை சிகிச்சை மூலமாக மற்றொருவரின் முகம் பொருத்தப்படுகிறது. ‘நீங்கள் அழகாக இல்லை ’ என்று கூறி சிவாவின் காதலை மறுக்கும் மேகா ஆகாஷ், அறுவை சிகிச்சைக்குப் பின் ‘அழகாக இருக்கிறீர்கள்’ என்பதைக் காரணமாகக் கூறியே தன் காதலை, சிவாவிடம் வெளிப்படுத்துகிறார். அழகையும் காதலையும் பெற்றுத் தந்த புதிய முகம் கூடவே சில பிரச்சினைகளையும் தருகிறது.
சிவாவைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த முகத்தின் சொந்தக்காரர் யார், அவர் சார்ந்த பிரச்சினை என்ன? அவர் முகம் இருப்பதால் தவறுதலாக, சிவாவின் மீது தாக்குதல் நடத்தப்படுவதன் பின்னணி என்ன என்ற கேள்விகளுக்கு விடையும், பிரச்சினைக்குத் தீர்வும் தேடும் கோணத்தில், பூமராங் திரைப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.
இரவின் ஒளிவிளக்குகளுக்கு இடையே சாலையைக் கிழித்துக் கொண்டு, பாய்ந்து செல்லும் ஆம்புலன்ஸின் சத்தம், கலவரம் நிறைந்த முகங்கள், பதற்றம் நிறைந்த மருத்துவமனை என்று திரைப்படத்தின் முதல் காட்சியில் ஆரம்பிக்கும் பரபரப்பு முதல் பாதி முடியும் வரைத் தொடர்கிறது. இடைவேளைக்கு முன்னதான காட்சிகளில், அதர்வாவின் முகத்தில் தெரியும் மரண பீதியும், பதற்றமும், குழப்பங்களும், திரையைத் தாண்டி, பார்வையாளர்களையும் நடுங்க வைக்கிறது.
சிவா, சக்தி என்று இரு கதாபாத்திரங்களை அதர்வா கையாண்டுள்ளார். தாடியைத் தவிர இரு கதாபாத்திரங்களுக்கும் வேறு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. முகமாற்று அறுவை சிகிச்சை செய்தால், குரல் கூட மாறி விடுமா என்று யோசிக்க வைக்கிறது. காதல், வீரம், பரிவு என்று ரசிக்க வைத்தாலும், இரு கதாபாத்திரங்களையும் சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாம்.
மேகா ஆகாஷ், இந்துஜா என இரண்டு கதாநாயகிகளில் இரண்டாம் பாதியில் மாயாவாக வரும் இந்துஜாவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம். விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் கல்லூரி மாணவியாக வரும் மேகா ஆகாஷின் கதாபாத்திரம், கதையை நகர்த்திச் செல்லும் சாத்தியங்களைப் பெற்றிருந்தும், கதாபாத்திர வடிவமைப்பிற்கு ஏற்றவாறு, அவரது கதாபாத்திரம் கையாளப்படவில்லை. அவர்களின் காதல்கூட வழக்கமான தமிழ் சினிமா பார்முலா மாறிவிடக் கூடாது என்பதற்காக வெறுமனே புகுத்தியது போன்று உள்ளது. இரண்டாம் பாதியில் இந்துஜாவையும் காதல் என்று கூறி சுற்ற வைக்காமல் கதையை நகர்த்தியது ஆறுதல் அளித்தது.
சமகால அரசியல் நையாண்டிகளை முன்னிறுத்தி அமைந்த சதீஷின் நகைச்சுவை சிரிக்க வைத்தது. ஆர்.ஜே.பாலாஜிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். நாராயண் லக்கி, ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து வசனம் கூட இல்லாமல் வெறுமனே உட்கார்ந்து செல்கிறார். சுஹாசினி, மகேந்திரன் என பல தேர்ந்த நடிகர்கள் இருந்தும் யாருடைய திறமையும் சரிவர வெளிக்காட்டுவதற்கான களம் திரைப்படத்தில் அமையாமல் போனது வருத்தமளித்தது.
பரபரப்பான நகரச் சூழலுக்குள்ளும் ஒளிந்திருந்து மிளிரும் அழகும், கிராமத்தின் பசுமையும், வறட்சியின் கொடுமையும், புழுதியின் வேகமும் பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவில் வெளிப்படுகிறது. ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்புக்குக் கைகொடுக்கும் அளவுக்குத் திரைக்கதை அமையவில்லை. ராதன் இசையில் பாடல்கள், ஆழமாய்ப் பதிந்து முணுமுணுக்க வைக்காவிட்டாலும் ரசிக்கும்படி உள்ளது.
காதல் படமாக இருந்தாலும் காமெடி படமாக இருந்தாலும் விவசாயம், புரட்சி என்று ஏதேனும் ஒன்றை சமீப காலமாகப் பல தமிழ்ப் படங்களில் புகுத்தி வருகின்றனர். அவ்வாறு வெறுமனே பேசி செல்லாமல், விவசாயமும், நதி நீர் இணைப்பும் ஆழமாக முக்கிய அம்சமாக இந்தத் திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது. முதல் காட்சிகளில் வரும் அறுவை சிகிச்சையில் ஆரம்பித்து ரத்தம், அடிதடி என்று படம் முழுக்க ‘திக், திக்’ அனுபவம் தான்.
முதல் பாதியிலிருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகளும் தென்படுகின்றன. இவையும் தவிர்க்கப்பட்டிருந்தால் முழுமையான பொழுதுபோக்கு படமாக பூமராங் அமைந்திருக்கும்.�,”