3விமர்சனம்: எழுமின்!

public

குழந்தைகளை நம்புங்கள். குழந்தைகளை நாம் நம்ப வேண்டுமானால் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். குழந்தையாக இருந்த நாட்களை நினைவில் கொள்ளுங்கள் அப்போது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கற்றுத் தரப்பட்டது நாம் (குழந்தைகள்) நம்பிக்கைக்குரியவர்கள் இல்லை என்பதுதான். நாம் அன்று எவ்வாறு நடத்தப்பட்டோமோ அவ்வாறே இப்போதும் நமது குழந்தைகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு இதுதான் யதார்த்தம் என்றோ அல்லது இவ்வாறு நாம் செய்தால் தான் அவர்களால் வெற்றி பெற முடியும் என்றோ மிகக் குரூரமான முறையில் சமாதானம் கூறிக் கொள்கிறோம்.

அச்சம், அவநம்பிக்கை என்று நீண்டகாலமாக நிலைத்து வரும் இச்சுழற்சியை உடைப்பதன் மூலமும், நம்மை நாமே நம்பவில்லை என்றாலும் குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் இதைச் சாதிக்க வேண்டும். இதை சாதிப்பதற்கு மிகப்பெரிய நம்பிக்கை வேண்டும். இதைச் சாதித்துவிட்டால் அபூர்வமான புதையலே நமக்காகக் காத்திருக்கிறது. அந்தப் புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை விளக்கும் படம்தான் ‘எழுமின்’.

தொழிலதிபர் விஸ்வநாதன் (விவேக்) – பாரதி (தேவயானி) தம்பதி, தங்கள் ஒரே மகன் அர்ஜுனை (சுகேஷ்). குத்துச்சண்டை வீரனாக வளர்க்கிறார்கள். குத்துச்சண்டைப் பயிற்சியில் பழக்கமாகும் நண்பர்களான அஜய் (பிரவீண்), கவின் (ஸ்ரீஜித்), வினித் (வினித்), ஆதிரா (கிருத்திகா), சாரா (தீபிகா) ஆகியோரும் தற்காப்புக் கலைகளில் வல்லவர்கள். இவர்கள் தற்காப்புக் கலையைத் தொடர்ந்து கற்க, குடும்பப் பொருளாதாரச் சூழல் தடையாக இருக்கிறது.

அதனால் அவர்களின் விளையாட்டுச் செலவை ஏற்கிறார் விவேக். ஒரு கட்டத்தில் பெரும் சோகட்தில் சிக்கும் விவேகிற்கு ஆறுதலாய் இருக்கிறார்கள் அர்ஜுனின் நண்பர்கள். அவர்களின் கனவை நனவாக்கப் போராடும் விவேக்குக்குத் தடையாக வருகிறது ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சுந்தரத்தின் (அழகம்பெருமாள்) அரசியல். அந்த அரசியலை முறியடித்து எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

தனது முதல் திரைப்படத்திலேயே சமூக அக்கறை கொண்ட கதைக் களத்தை வி.பி.விஜி தேர்ந்தெடுத்திருக்கிறார். தங்களுக்கு நடக்கும் அநீதிகளிலிருந்து தற்காத்துக்கொள்ளக் குழந்தைகளுக்குக் கல்வியோடு தற்காப்புக் கலையும் முக்கியம் என்பதை அன்பாக, மிரட்டலான காட்சிகளோடு சொல்லியிருக்கிறார். சொல்ல வந்த விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி, அதற்கான நேர்த்தியான திரைக்கதை மூலம் உருவாகி இருக்கிறது இப்படம்.

சமகால அரசியலும் விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியலும் பல படங்களில் பேசப்பட்டாலும் இப்படம் அதைத் தோலுரித்துக் காட்டுகிறது. விவேகானந்தரின் “எழுமின்! விழிமின்! குறி சாரும்வரை நில்லாது செல்மின்!” என்ற கோட்பாட்டோடும், அப்துல் கலாமின் கருத்துகளோடும் திரைக்கதை பயணிக்கிறது.

குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும் பள்ளித் தாளாளரை கண்டால் எப்படி பயப்படுகிறார்கள் என்பதை விளக்கும் காட்சியில் பல பெற்றோர்கள் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர். குழந்தைகள் பயப்படாமல்தான் இருக்கிறார்கள், உங்களின் பயத்தை போக்கினாலே குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மீது மரியாதை மட்டும் வரும்; பயம் வராது என்ற தொனியில் அமைந்திருக்கும் அந்தக் காட்சி அற்புதம். இது போல் படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் பெற்றோருக்கானவையே.

விவேக் இதுவரை தான் நடித்திருந்த கதாபாத்திரத்திலிருந்து மாறுபட்டு, தன் நடிப்பின் முதிர்ச்சியை நிறுவுகிறார். அதிலும் அவர் சோகத்தில் மூழ்கும் கட்சியில் பார்வையாளர்களையும் அதில் பங்கெடுக்க வைத்திருக்கிறார். தேவயானி பொறுப்பான அம்மாவாக வலம் வந்திருக்கிறார். பாக்சிங், கராத்தே, குங்ஃபூ, சிலம்பம், ஜிம்னாஸ்டிக் என சிறுவர்கள் செய்யும் ஒவ்வொரு சாகசமும் மிரளவைக்கிறது. வில்லன்களாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், ரிஷி, போலீசாக நடித்திருக்கும் பிரேம்குமார் என அனைவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். செல் முருகன் வந்து போகுமிடங்களில் சிரிப்பலையில் அதிர்கிறது திரையரங்கம்.

கணேஷ் சந்திரசேகர் இசையில் பாடல்கள் கவனம் பெறுகின்றன. தனுஷ் குரலில் ‘எழடா மகனே’ பாடல், வேலையில்லாப் பட்டதாரி படத்தில் இடம்பெற்ற ‘அம்மா அம்மா’ பாடலை நினைவூட்டுகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக இருந்தாலும் பல இடங்களில் படத்திற்கு உயிரூட்டுகிறது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவும், கார்த்திக் ராமின் படத்தொகுப்பும் படத்தின் பக்கபலம். ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கல் மைக்கேல் ராஜின் வடிவமைப்பில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் குழந்தைகள் மிரட்டி இருக்கிறார்கள்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் இச்சூழலில் கண்டிப்பாகக் குழந்தைகளுடன் பார்க்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது எழுமின்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *