சிறப்புச் செய்தி: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் நிலை என்ன?

public

ரகுநாத்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தின் பல பகுதிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் எனப்படும் Micro, Small and Medium Enterprises (MSME) துறை மிகக் கடுமையாக அடிவாங்கியுள்ளது. அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு சமீபத்தில் 5,000 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஆய்வு செய்தது. அவற்றில் 71 விழுக்காடு தொழில்களால் தங்கள் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதத்துக்கான ஊதியம் வழங்க முடியவில்லை என்று ‘தி இந்து’ நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மற்றும் Global Allaince for Mass Entrepreneurship (GAME) எனும் நிறுவனம் சேர்ந்து இந்தியாவிலுள்ள சிறுதொழில்கள் பற்றி “Microenterprises in India: A Multidimensional Analysis” என்ற விரிவான அறிக்கை ஒன்றை சென்ற ஆண்டு வெளியிட்டனர். பொருளாதாரக் கணக்கெடுப்பு (Economic Census) 2013-14, விவசாயமற்ற மற்ற முறைசாராத் தொழில்கள் பற்றி தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) 2010-11 மற்றும் 2015-16 இல் மேற்கொண்ட ஆய்வுகள் தரும் விவரங்களை ஆராய்ந்து பார்த்து, அவற்றில் கவனிக்கத்தக்க போக்குகளை இந்த அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.

அகில இந்திய அளவில் 6.34 கோடி MSMEக்கள் உள்ளன; அவற்றில் பெரும்பான்மைத் தொழில்கள் (68.9 விழுக்காடு) பதிவு செய்யப்படாதவை. 55 விழுக்காடு தொழில்கள் ஒரேயொரு நபரைக் கொண்டு மட்டுமே இயக்கப்படுவதும், 32 விழுக்காடு தொழில்கள் 2-3 நபர்களைக் கொண்டு இயக்கப்படுவதும் தெரியவருகிறது. MSMEக்களில் 10 தொழிலாளர்கள் அல்லது அதற்கும் குறைவான ஆட்களை வைத்துக்கொண்டு இயங்கும் சிறு தொழில்களே 99 விழுக்காடு பங்கு வகிக்கின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், MSMEக்கள் சுமார் 11.50 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. பணிப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் இல்லாத முறைசாரா வேலைகள் இவை என்பதை இங்கு வலியுறுத்துவது அவசியம். நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 30 விழுக்காடும், நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50 விழுக்காடும் MSMEக்களில் இருந்து வருகின்றன.

அரசு அறிவித்த ரூ. 1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிவாரணத் தொகுப்பில் MSMEக்களுக்கென பிரத்யேகமாக எந்த நிவாரணமும் இல்லை. இதைப் பொருளாதார அறிஞர்கள் கடுமையாக விமர்சித்தனர். பொதுத் துறை வங்கிகள் மற்றும் சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) வழியாக MSMEக்களுக்கு நிவாரணம் வழங்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அவசரக் காலத்துக்கான கூடுதல் கடன், வட்டிக் குறைப்பு, தவணைகளைச் செலுத்தும் விதிமுறைகளைத் தளர்த்துவது போன்ற அறிவிப்புகள் வரவேற்கக்கூடியவைதான்.

சுயதொழில் செய்து பிழைப்பவர்களில் பெரும்பான்மையானோரின் சராசரி மாத வருமானம் ரூ.8,000 – ரூ.10,000 ஆக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு நெருக்கடி நேரும்போது அவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு அவர்களால் எப்படி ஊதியம் வழங்க முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதனால், MSMEக்கள் எதிர்கொள்ளும் வணிக ரீதியான நெருக்கடியை மட்டுப்படுத்த அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தில் கணிசமான பங்கை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. MSMEக்களுக்கான ஒரு பிரத்யேகமான நிவாரணத் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல், பதிவுசெய்யப்படாத MSMEக்களையும், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களை அடையாளம் காண்பதுதான். MSMEக்களைப் பற்றிய போதுமான தரவுகள் அரசிடம் இல்லை. இதை சென்றாண்டு ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி அமைத்த MSMEக்களுக்கான நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியது. MSMEக்களைப் பற்றி முழுமையாக தரவுகளை சேகரிக்கும் MSME Census கடைசியாக மேற்கொள்ளப்பட்டது 2006-07ஆம் ஆண்டில்.

உத்யோக் ஆதார் மெமோராண்டம் (UAM), MSME தரவு வங்கி மற்றும் ஜிஎஸ்டி நெட்வொர்க் (GSTN) என MSMEக்கள் பற்றிய விவரங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக மோடி அரசு சிறு தொழில்களுக்கு MUDRA வங்கிக்கடன் வழங்கி வருகிறது. இவற்றையெல்லாம் தொகுத்தால்கூட 6 கோடி MSMEக்களில் ஐந்தில் ஒரு பங்கு தொழில்களைப் பற்றிய தரவுகள் மட்டுமே அரசின் கைகளில் இருக்கும் என்று கட்டுரைகள் வந்தவண்ணம் உள்ளன.

தற்காலிக வரிச்சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் போன்றவை பெருநிறுவனங்களுக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், பத்துக்கும் குறைவான வேலையாட்களை வைத்துக்கொண்டு சிறிய அளவில் தொழில் செய்பவர்களைக் காப்பாற்ற வேறு வடிவங்களில் அரசின் இடையீடுகள் இருக்க வேண்டும். அதைப்பற்றிய விவாதங்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *