நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்டத் தலைவர்களுக்கு இல்லையென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜி.சுரேஷ் குமார் பதவி வகித்துவந்தார். இதுபோலவே பேரணாம்பட்டு ஒன்றிய தலைவராக ஜி.கே.ஜலபதியும், நிர்வாகிகளாக ஜே.கிருஷ்ணவேணி, தேவகி ராணி ஆகியோர் பதவி வகித்துவந்தனர். இவர்கள் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி நீக்கம் செய்த மாவட்டத் தலைவர் ஜோதி, அந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகளையும் நியமித்தார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (நவம்பர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரின் ஒப்புதல் இல்லாமல், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள், ஏற்கெனவே பொறுப்பில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் இதர துறைகளைச் சார்ந்த நிர்வாகிகளைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கிடையாது. அதேபோல், மாவட்ட கமிட்டிக்கு கீழ் உள்ள அமைப்புகளுக்கு மாநிலத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் புதிதாக எந்த பொறுப்புக்கும் யாரையும் நியமனமும் செய்ய முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜே.ஜோதியின் தன்னிச்சையான இந்த நீக்க அறிவிப்பு கட்சி விதிகளுக்குப் புறம்பானது மற்றும் செல்லத்தக்கது அல்ல என்று தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, “ஜோதியால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள். அதேபோல், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்கிறேன். இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளார்.�,”