பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள், மற்றும் நலத் திட்ட உதவிகளை அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் “தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் அறிவித்தார். அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் “பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.
அதனை செயல்படுத்தும் விதமாக “பத்திரிகையாளர் நல வாரியம்” ஒன்றை உருவாக்கி இன்று(டிசம்பர் 3) தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத்திட்ட உதவிகளுடன், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருக்கலைப்பு, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் நலவாரியத்தின் மூலம் வழங்க இந்த அரசாணை வழிவகை செய்கிறது.
பத்திரிகையாளர்களுக்கு நல உதவித் திட்டங்களை செயல்படுத்த 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக செய்தித்துறை அமைச்சர் செயல்படுவார். இதில் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 பேரும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 பேரும் உள்ளனர்.
பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையாக பத்திரிகைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பர கட்டணத்தில் 1% தொகையை நல வாரியத்திற்கென வழங்கிட ஆணையிடப்படுகிறது.
பத்திரிகையாளர் நல வாரியத்திற்கென புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் மற்றும் ஒரு இளநிலை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் உருவாக்கப்படும். திரைப்பட துறையினர் நல வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்களே, பத்திரிகையாளர் நல வாரிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,”