டாஸ்மாக் பாதுகாப்பை குறைக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மே 16ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக செயல்படத் தொடங்கின. எனினும், சமூக இடைவெளி முறையாகக் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அறிய காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பை குறைக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், “கொரோனாவைக் கட்டுப்படுத்த பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5,724 டாஸ்மாக் கடைகளில் 1,827 காவல் நிலையங்களிலுள்ள காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ஆகவே, டாஸ்மாக் கடைகளுக்கான போலீஸ் பாதுகாப்பை குறைத்து, கொரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளுக்கு அதிக காவல்துறையினரை ஈடுபடுத்த வேண்டும். ஆயுதப்படை காவலர்களை வேண்டுமானால் டாஸ்மாக் பாதுகாப்பில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று (ஜூன் 19) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக உள் துறை மற்றும் வருவாய்த் துறைச் செயலாளர்கள், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். வழக்கையும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
**எழில்**�,