டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு முழு கவனத்தோடு செயல்பட வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 22) நேரில் சென்றார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு உள்ளே நுழைந்த அவர், நூலகத்தின் ஒவ்வொரு பகுதிக்குச் சென்று பார்வையிட்டு, அங்கிருந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். நூலகத்தின் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார்.
அதன் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு முழுமையாக ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. மாநிலம் முழுவதும் 2,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுவர்கள், குழந்தைகள் பலியாகியிருப்பது வருத்தமளிக்கிறது. டெங்குவை கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். குட்கா விஷயத்தில் மாமூல் வாங்க அமைச்சர் விஜயபாஸ்கர் எவ்வளவு தீவிரமாக இருந்தாரோ அதே தீவிரத்தை இதில் காண்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், “அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தைப் பார்வையிட்டுவிட்டு, அதில் ஆயுட்கால உறுப்பினராக என்னை இணைத்துக்கொண்டேன். நூலகத்திலுள்ள குறைபாடுகளை அங்கிருந்த மக்கள் என்னிடம் எடுத்துச் சொன்னார்கள். இனியும் அண்ணா நூற்றாண்டு நூலக விவகாரத்தை அரசியலாக்காமல் பொதுமக்கள், மாணவர்கள் பயன்படக்கூடிய வகையில் முறையாக பராமரிக்க வேண்டும்” என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
�,