கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தைப் பொறுத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. முன்பு மாதத்திற்கு இருமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில், நாள்தோறும் நிர்ணயிக்கும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 44.80 டாலராக இருந்த நிலையில், தற்போது 31.5 சதவிகிதம் குறைந்து 31.02 டாலராக உள்ளது. இருந்தபோதிலும் இதுவரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சில பைசாக்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வாகன ஓட்டிகள் முன்வைக்கின்றனர். இதுபோலவே அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 10) தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், அதன் பலன்களை இந்திய நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் விரைவாகச் செயல்பட வேண்டும். பெட்ரோல், டீசல், எல்பிஜி கியாஸ் விலை குறைப்பு பொருளாதார வளர்ச்சியையும் தூண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது உடனடியாக உயர்த்தும் அரசுகள், இப்போது கடுமையான விலை சரிவின்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டாமா?” என்ற கேள்வியையும் முன்னிறுத்தியுள்ளார்.
இதுபோலவே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், “கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “எனவே கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் சரிந்திருக்கும்போது அதன் பலன் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால் கச்சா எண்ணெய் கொள்முதலில் வருடத்திற்கு 10,000 கோடி மிச்சமாகும். இப்போது 25 டாலர் குறைந்திருக்கிறது. 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி மிச்சமாகும். அந்த லாபம் அரசுக்கா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா?” என்றும் கேட்டுள்ளார்.
**-எழில்**�,