தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த பின், மகாராஷ்டிர களத்தில் சிவசேனா தனித்து விடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
105 இடங்களை வென்ற பாஜகவும், 56 இடங்களைப் பெற்ற சிவசேனாவும், முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையைப் புதிய அரசாங்கத்தில் பகிர்ந்துகொள்வது தொடர்பாகக் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்றத் தேர்தல் தீர்ப்பு பாஜக – சிவசேனா கூட்டணிக்கு போதுமான இடங்களை வழங்கியபோதும், இவ்விரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது.
சிவசேனா வைக்கும் முக்கியமான நிபந்தனை, ஆதித்யா தாக்கரேவை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் ஆக்க வேண்டும்; மீதமுள்ள காலத்தில் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்; ஐந்து ஆண்டுகளுக்கும் உள்துறை பொறுப்பு சிவசேனாவிடம்தான் இருக்க வேண்டும் என்பதுதான். பாஜக தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான முதல்வர் என முடிவெடுத்திருக்கும் நிலையில், சிவசேனாவின் நிபந்தனைகளுக்கு செவிசாய்க்க ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.
இந்தப் பின்னணியில்தான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேற்று மாலை மீண்டும் ஒருமுறை சந்தித்தார் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை உருவாக்குவதில் எனக்கு பங்கு இல்லை. எதிர்க்கட்சியில் அமர மட்டுமே மக்கள் எங்களுக்கு ஆணையை வழங்கியுள்ளனர். நாங்கள் எங்கள் பங்கை திறம்பட செய்ய தயாராக உள்ளோம். அரசு அமைப்பதில் நான் எந்தப் பங்கிலும் ஈடுபடவில்லை.
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. மாநிலத்தில் சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதை ஏற்று இரு கட்சியினரும் விரைவில் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். இந்த ஒருவாய்ப்பு மட்டும்தான் இருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் விரைவாக அரசாங்கத்தை அமைக்க வேண்டும், அரசியலமைப்பு நெருக்கடியில் மாநிலத்தை நழுவ விடக்கூடாது” எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
தற்போதுள்ள மாநில சட்டசபையின் காலம் நவம்பர் 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால், சிவசேனாவுக்கு பாஜகவுடன் இணைவதைத் தவிர வேறு வழியில்லை. சிவசேனா பல்வேறு வழிகளிலும் முதல்வர் அரியணையைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது பின்னடைவே. அதே சமயம், பாஜக எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் உட்படாமல் மெளனமாக இருந்தே தனது தீர்மானத்தில் உறுதியாக நின்றுவிட்டது.
இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை என்று சஞ்சய் ராவுத் நேற்று (நவம்பர் 6) மாலை தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் ஆளுநரைச் சந்தித்தோம். இந்தியக் குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அதாவலேவும் ஆளுநரைச் சந்தித்தார். இந்த நிலையில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரி நாளை ஆளுநரைச் சந்தித்தால், அவர்கள் அதிக இடங்கள் பெற்ற தனிக்கட்சியாக இருக்கும் பட்சத்தில் ஆட்சியமைக்கட்டும். நாங்கள் முதலிலிருந்து இதைத்தான் கூறிவருகிறோம் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால் அவர்கள் ஆட்சியமைக்கட்டும் என்றுதான் கூறுகிறோம்” என்றார்.
பாஜகவின் தூதுக்குழு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நாளைச் சந்திக்கவுள்ளது. மீண்டும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் தெரிவிக்கவுள்ளது. புதிய மாநில பிரிவுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. தற்போது பதவியில் இருக்கும் சந்திரகாந்த் பாட்டீல் அடுத்த அமைச்சரவையில் நீடிப்பார் எனக் கூறப்படுகிறது. ஆளுநரைச் சந்திக்கும் முன், பாஜக – சிவசேனா கட்சி தரப்பில் முக்கியக் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.�,