இந்தியன் 2 விபத்து குறித்து தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் கமல்ஹாசன் அதிமுக அரசு மீது மிகுந்த கோபம் கொண்டிருப்பதாக மநீம வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்த இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையரும், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியுமான நாகஜோதி ஐபிஎஸ், இயக்குனர் ஷங்கரை விசாரித்தார். அவரே மார்ச் 3 ஆம் தேதி காலை கமல்ஹாசனையும் விசாரித்தார். விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்,
“நான் இழந்த மூன்று சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை எண்ணி இங்கே காவல்துறைக்கு நடந்த சம்பவங்களின் கோர்வையை எனக்குத் தெரிந்த அளவில் எடுத்துச் சொல்வதற்கும், எங்கள் துறையில் இனி இதுபோன்ற விபத்துக்கள் நேராமல் இருப்பதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சிகளின் முதற்கட்ட முயற்சியாகவே இந்த கலந்துரையாடலை நான் கருதுகிறேன். காவல்துறைக்கு அங்கு நடந்த சம்பவங்களையும், இனி இதுபோன்று விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஏதாவது கருத்துக்கள் இருப்பின் அதையும் நாங்கள் வந்து கேட்டு தெரிந்துகொள்கிறோம் என்பதையும் அவர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன்” என்று கூறினார்.
ஆனால் இரண்டு மணி நேரம் நடந்த விசாரணையில் கமலை மிகவும் நோகடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் கமல் தரப்பினர். விசாரணையில் கமலுக்கு அப்படி என்ன நேர்ந்துவிட்டது என்று விசாரித்தோம்.
“விசாரணைக்கு போக தேவையில்லை என்று வழக்கறிஞர்கள் சொல்லியும், பரவாயில்லை நான் செல்கிறேன் என்று தைரியமாக சென்றார் கமல்ஹாசன். புதிய கமிஷனர் ஆபீஸ் வளாகத்திலுள்ள துணை ஆணையர் நாகஜோதியின் அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது. கமல்ஹாசனிடம், ‘நீங்கதான் கமலஹாசனா? இந்தியன் டூ படத்துல நீங்கதான் ஹீரோவா நடிக்கிறீங்களா’ என்று கேள்விகளைக் கேட்டார் நாகஜோதி. கமல், ‘ஆமாம்.. நான் தான் கமல்ஹாசன். அந்தப் படத்துல நான் நடிக்கிறேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.
அன்னிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்ததுனு சொல்ல முடியுமா என்று துணை ஆணையர் நாகஜோதி கேட்க, விரிவாக சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். அப்போது துணை ஆணையர் நாகஜோதி, ’நீங்க நல்லா நடிப்பீங்களே… அப்படியே அந்தக் காட்சிகளை நடிச்சுக் காட்டுங்க’ என்று கூற கமல் அதிர்ச்சியாகிவிட்டார்.
மேடம்… இது ஒரு துயரமான சம்பவம் என்று கமல் சொல்ல, கிரேன் என்ன பொசிஷன்ல இருந்தது, எப்படி அது விழுந்தது, நீங்க எப்போ பார்த்தீங்க இதெல்லாம் நடித்துக் காட்டுங்க என்று துணை ஆணையர் கூற, அங்கே நடந்த காட்சிகளை சித்திரித்துக் காட்டியிருக்கிறார் கமல். கிரேன் என்ன பொசிஷனில் விழுந்தது என்பதை தான் பார்க்கவில்லை, அதற்கு சற்று முன்னர்தான் அங்கிருந்து சென்றதாகவும் சொல்லியிருக்கிறார் கமல்” என்கிறார்கள்.
விசாரணை முடித்துவிட்டு வந்த கமல்ஹாசன், “அந்த அதிகாரி என்னை நடிச்சுக் காட்டச் சொல்றாங்க. கிரிமினல்ஸை சம்பவம் நடந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போயி நடிச்சுக் காட்டச் சொல்ற மாதிரி அவங்க கேட்குறாங்க. இதை அவங்களா கேட்டிருக்க மாட்டாங்க. மேலேயிருந்து கேட்க சொல்லியிருப்பாங்க” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மேலே என்று கமல் சொன்னது அதிமுக அரசைதான்.
கமல்ஹாசனின் இந்த கோபத்தைத்தான், மக்கள் நீதி மய்யத்தின் நற்பணி இயக்க மாநில செயலாளர் ஆர்.தங்கவேலுவின் அறிக்கை பிரதிபலித்தது.
“ விபத்து நடந்த தளத்திலிருந்து நான்குநொடிகள் முன்பாகத்தான் தலைவர் அங்கிருந்து சென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்துவரும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே கணிசமான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளோம். எங்கள் வளர்ச்சியைப் பிடிக்காத தமிழக அரசு காவல்துறை மூலமாக சாட்சி என்ற பெயரில் தலைவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்கள். தமிழக அரசே இந்த செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும். தலைவர் மீது சிறு துரும்பு பட்டாலும் லட்சக்கணக்கான இயக்கத் தோழர்கள் அவருக்கு அரணாக நின்று பாதுகாப்போம்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் தங்கவேலு.
இதற்கிடையே இந்த விபத்தை மையமாக வைத்து கமலிடம் அடுத்த கட்ட விசாரணையும் தேவைப்பட்டால் நடக்கும் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
**-வணங்காமுடி**�,