ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரையை இந்த ஆண்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த ரத யாத்திரை நடப்பாண்டு ஜூன் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் பூரி ஜெகநாதரே மன்னிக்க மாட்டார் என்று கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே அடங்கிய அமர்வு, கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது. பொது மக்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பு மேல் உள்ள அக்கறையால் இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு இந்த அனுமதி அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில்கொண்டு மாநில அரசு ரத யாத்திரை மற்றும் அது தொடர்பான எந்த நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் ரத யாத்திரை இந்தியாவின் மிகப்பெரிய தேர் திருவிழாக்களில் ஒன்றாகும்.
10இல் இருந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரைக்குப் பொதுவாக உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்த ரத யாத்திரையை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்திருந்தது. ஒடிசா மட்டுமில்லாமல் இந்திய நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி இருப்பதால் இந்த ரத யாத்திரைக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் கோரப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் பூரி ஜெகன்நாதரே மன்னிக்க மாட்டார் என்று கூறியுள்ளது.
**-பவித்ரா குமரேசன்**�,”