பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள்!

Published On:

| By Balaji

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முத்துராமலிங்க தேவரின் 114ஆவது ஜெயந்தி விழாவும், 59ஆவது குரு பூஜையையும் வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (அக்டோபர் 13) ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கணேசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார். ”பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப்படும்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாகவும், பொதுமக்கள் நலன் கருதியும் வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரையில் கமுதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் ராமநாதபுரம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து

கொள்ள அனுமதியில்லை.

பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், அமைப்புகளின் தலைவர்கள் 5 நபர்களுக்கு மிகாமல் மூன்று வாகனங்களில் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி மற்றும் வாகன அனுமதியைப் பெற்று வர வேண்டும். அவர்கள், அரசு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற வரும் 18-24ஆம் தேதிவரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அனுமதி பெறுவோர் தங்களுடைய சொந்த நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே வர வேண்டும், மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவ்வாறு வரும்போது வெடி வெடிக்கவோ, ஒலிபெருக்கி பயன்படுத்தவோ, பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ, கூடம் அமைத்து அன்னதானம் பரிமாறவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றியும், உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பசும்பொன் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தலாம்” என்று மாவட்ட ஆட்சியர் கணேசன் தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share