புதுச்சேரியில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதைத் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது. மக்கள் புதிய இயல்பு வாழ்க்கையை பழகத் தொடங்கினர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதித்தது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் கல்விச் சூழல் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. பள்ளிகளில் ஏராளமான இடைநிற்றலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் ஆண்டுக் கணக்கில் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆன்லைன் கல்வி என்பது பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு சரியாக கிடைத்தது ஆனால், கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் கல்வியை முறையாக அணுக முடியாத சூழலில் முற்றிலும் கல்வியிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.
அதன் காரணமாக, கடந்த ஆண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான் மாணவர்கள் நேரடி வகுப்புகள் மூலம் கல்வி கற்று வருகின்றனர். இன்னும் மாணவர்களுக்கு முழு பாடங்களும் நடத்தி முடிக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் தேர்வுகளில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
எல்கேஜி முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நாளையுடன் நிறைவு பெறும். அந்த வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை சனிக்கிழமை முதல் தொடங்கும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 30ஆம் தேதி வரையும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 28ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.