Nபிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்!

Published On:

| By Balaji

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆகஸ்டு 10 ஆம் தேதி உடல் நல சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்ற பிரனாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் முக்கியமான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும் வென் டிலேட்டர் உதவியுடனே அவரால் சுவாசிக்க முடிகிறது என்றும் நேற்று ராணுவ மருத்துவமனை தெரிவித்தது. பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 10 ம் தேதி மூளையில் உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சை நடந்தது.

இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இராணுவ மருத்துவமனைக்கு நேற்று சென்று மருத்துவர்களை சந்தித்து முன்னாள் குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் முன்னாள் குடியரசுத் தலைவர் உடல் நலம் மீண்டு வரபிரார்த்தனை செய்தனர்.

கொரோனா தொற்று பரவல் அபாயத்தால் கடந்த சில வாரங்களாகவே தனது சந்திப்புகளை வெகுவாகக் குறைத்துக் கொண்ட பிரணாப் முகர்ஜி, தன் ராஜாஜி மார்க் இல்லத்தில் பொது சந்திப்புகளை தவிர்த்தே வந்தார். இந்நிலையில் அவரையும் கொரோனா தொற்று தாக்கிவிட்டது. பிரணாப் முகர்ஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்ற நிலையில் கொரோனாவும் சேர்ந்துகொண்டு முன்னாள் குடியரசுத் தலைவரின் உடல் நிலையை கவலைக்குரியதாக மாற்றிவிட்டது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share