இந்தியாவின் அடுத்த இரு மாதங்கள்: பிரதமர் ஆய்வு!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் நேற்று (ஜூன் 13) விரிவான ஆய்வு நடத்தினார்.

பெருந்தொற்று தொடர்பான ஆயத்த நிலை மற்றும் தேசிய அளவிலான நிலவரம் குறித்து, இந்தக் கூட்டத்தின்போது பிரதமர் ஆய்வு செய்தார். பல்வேறு மாநிலங்கள் மற்றும் டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் தற்போதைய நிலைமை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சரவைச் செயலாளர், சுகாதாரத் துறைச் செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநர் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பங்கேற்ற நிதி ஆயோக்கின் உறுப்பினரும், மருத்துவ அவசர மேலாண்மைத் திட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் உறுப்பினருமான டாக்டர் வினோத் பால், நடுத்தர கால அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.

பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பேர், அதிக பாதிப்புடைய பெருநகரங்களைக் கொண்ட ஐந்து மாநிலங்களில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பெரு நகரங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களைக் கருத்தில்கொண்டு, பரிசோதனைகள் மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிப்பது பற்றி விவாதிக்கப்பட்டதுடன், நோய் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான மேம்பட்ட சேவைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மற்றும் மாவட்ட வாரியாக மருத்துவமனைகளில் தேவைப்படும் படுக்கை வசதிகள், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் குறித்து, அதிகாரமளிக்கப்பட்ட குழு அளித்து பரிந்துரைகளைப் பரிசீலித்த பிரதமர் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளைக் கலந்தாலோசித்து, அவசரகால செயல் திட்டத்தை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பருவமழை காலத்தைக் கருத்தில்கொண்டு, அதற்கேற்ற ஆயத்த நிலைகளை உறுதி செய்யுமாறும், பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

தொற்று தொடர்பான தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், அடுத்த இரண்டு மாதங்களுக்கான கணிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பெருந்தொற்று பரவாமல் தடுக்கவும், இந்நோயைக் கட்டுப்படுத்தவும், பல்வேறு மாநில, மாவட்ட மற்றும் மாநகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைசிறந்த நடவடிக்கைகளுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகள், மற்ற பகுதிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், புதுமையான யோசனைகளை வழங்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share