h7ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் 7ஆவது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் விமானம் எரிபொருள், ஜெட் எரிபொருள் மற்றும் எல்பிஜி கியாஸ் தவிர அவ்வப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை திருத்திவருகின்றன. எனினும் மார்ச் 16ஆம் தேதியில் இருந்து 12 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியை சந்தித்ததுதான் காரணம்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 6ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் திருத்தியமைக்கும் வழக்கமான நடைமுறைக்கு திரும்பியது. அன்றிலிருந்து தொடர்ச்சியாக 7ஆவது நாளாக இன்று (ஜூன் 13) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 59 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 58 பைசா அதிகரித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தரவுப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 78.99 ரூபாய்க்கும், டீசல் விலை 71.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று மாற்றம் கண்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடைசியாக 24 காசுகள் உயர்ந்து பேரல் ஒன்று 38.79 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “பெட்ரோலுக்கான வரி விகிதம் 275 சதவிகிதமும், டீசலுக்கான வரி விகிதம் 255 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் கையில் பணமில்லாமல் வாழத் திணறிக் கொண்டிருக்கும்போது பசியால் செத்து பிழைத்து கொண்டிருக்கும்போது பெட்ரோல், டீசல் மீது இமாலய அளவு வரிகள் சுமத்தப்பட்டுள்ளன” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை சரி பாதியாக குறைந்திருக்கும் இந்த நேரத்திலும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மக்கள் மீதான சுமையை அரசே அதிகரிக்கும் செயல். பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையும், பெட்ரோல் டீசலின் விலையை பெரிதும் சார்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் மீதான விலைகுறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையையும் குறைத்து மக்களின் பொருளாதார சுமையை குறைக்கக் கூடும்.

ஆனால் அதற்கு மாறாக தொடர்ந்து விலையை உயர்த்திக் கொண்டே செல்லும் மக்கள் விரோத போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்.சராசரியாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 35 டாலர் குறைத்துள்ள இந்த சூழ்நிலையில், நம் பெட்ரோல், டீசல் விலையும் பாதியாக குறையவில்லை ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share