நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மட்டுமே தமிழர்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்திவைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்ச் சமூகம் தாய்மொழியை தொலைத்துவிட்டு தமிங்கலர்களாக மாறிவிட்டது. 10 வருடமாக கத்திக்கொண்டிருக்கிறாயே. உன் பேச்சை கேட்கிறார்களே. பிறகு ஏன் உனக்கு அதிகமாக வாக்கு வரவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு வாக்குகள் வரவில்லை. ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழர்கள்” என்று கூறினார்.
“மீதமுள்ளவர்கள் தமிங்கலர்களாக மாறிவிட்டார்கள்” என்று ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை விமர்சித்த சீமான், “இவர்களை மரத்தில் கட்டி வைத்து சட்டையை கழட்டிவிட்டு பச்சை பனை மட்டையின் கறுக்கை சீவிவிட்டு அடித்து முதுகுத் தோலை உறித்துவிட்டு உப்பை தேய்த்துவிட வேண்டும்” எனவும் எச்சரித்தார்.
மேலும், “70 வயதில் ஒரு நடிகன் மார்கெட் இழந்துவிட்டால் அவனை முதல்வராக்குகிறார்கள். நடிப்பிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் ராணுவத்தில் சென்று பணியாற்றலாமே. அங்கு சென்று ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னது போல என்று வசனமெல்லாம் பேச முடியாது. 60 வயது அப்பா கிழவன். ஆனால், 70 வயது நடிகன் தலைவர்” என்று நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார்.
�,