�தமிழகத்தில் ஊரடங்கை மீறியதற்காக கிட்டத்தட்ட 5 லட்சம் பேரைக் கைது செய்து போலீசார் விடுவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 55 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனாலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மே 3ஆம் தேதிக்குப் பிறகு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, உள்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம் என பல்வேறு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
ஊரடங்கின் முதல் சில வாரங்கள் காவல் துறையின் கெடுபிடிகள் கடுமையாக இருந்த நிலையில், மே மாதம் தொடக்கத்திலிருந்து அது சற்று தளர்த்தப்பட்டது. எனினும், ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதற்காக வசூலிக்கப்படும் அபராதமும் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இந்த நிலையில் தமிழக காவல் துறை இன்று (மே 20) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 4 லட்சத்து 70 ஆயிரத்து 338 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 4 லட்சத்து 98 ஆயிரத்து 501 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டியதற்காக 4 லட்சத்து 07 ஆயிரத்து 118 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 6 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 244 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
**எழில்**
�,”