Jஅம்மன் கேரக்டரில் நயன்தாரா

Published On:

| By Balaji

நயன்தாரா நடிப்புக்கு குட்-பை சொல்லிவிட்டுச் சென்றபோது எத்தனையோ பேர் கண்ணீர் வடித்தனர். ஒரு நடிகை திரையுலகிலிருந்து வெளியேறும்போது ரசிகர்களிடையே பொதுவாக ஏற்படக்கூடிய அதிர்வு தான் என்றாலும், நயன்தாரா விஷயத்தில் கொஞ்சம் எக்ஸ்டாவாகவே இருந்தது. காரணம், அவர் சினிமாவை விட்டுச் செல்வதற்கு முன் கடைசியாக நடித்தது சீதையின் கேரக்டர். சீதையாக நடித்தவர் சினிமாவை விட்டுச் செல்கிறாரே என கண்ணீர் வடித்தவர் சிலர் என்றாலும், இவரைப் போய் அப்படிச் சொல்லிவிட்டோமே என வருந்தியவர்கள் பலர்.

ஸ்ரீ ராம ராஜ்ஜியம் திரைப்படத்தில் சீதையாக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல் வெளியானபோதே, பல விமர்சனங்கள் எழுந்தன. நயன்தாராவின் பொதுவாழ்வுடன் ஒப்பிட்டு, தெய்வீகமான கேரக்டரில் இவர் நடிப்பதா என்றெல்லாம் போராட்டம் நடத்தி நயன்தாரா மீது ஒரு கலாச்சார தாக்குதல் நடத்தினர். இன்னொரு தரப்பினர், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா எப்படி சீதையாக நடிக்கலாம் என்று மதப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஆனால், இந்தப் பேச்செல்லாம் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் திரைப்படம் ரிலீஸானதும் காணாமல் போனது. சீதை கேரக்டரில் அசத்தியிருந்தார் நயன்தாரா. சீதை கேரக்டரில் நடிப்பதற்காக, ஷூட்டிங் முடியும் வரை நயன்தாரா விரதம் இருந்த தகவல் வெளியானபோது அவர் சினிமாவில் இல்லை. அதன்பிறகு, தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த வாழ்வையும் துறந்து சினிமாவுக்குள் வந்தார்.

நயன்தாரா சினிமாவிலிருந்து வெளியேறியபோது ‘அவர் இருந்தாலும், தானாகவே மார்க்கெட் சரிந்திருக்கும்’, ‘சில வருடங்களில் காணாமல் போயிருப்பார்’, ‘தனி ஹீரோயினா தாக்குபிடிக்க முடியாது’ என பலவித விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சினிமாவுக்கு மீண்டும் வந்தபிறகு, இப்படி வைக்கப்பட்ட ஒவ்வொரு விமர்சனத்தையும் பொய்யாக்கிக் காட்டினார் நயன்தாரா. தனி ஹீரோயினாக பல படங்களில் நடித்தார்; சூப்பர்ஸ்டார் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு தனது மார்க்கெட்டை உயர்த்தினார். இதையெல்லாம் முடித்த பிறகு, இப்போது ‘இவர் எப்படி தெய்வீகமான கேரக்டரில் நடிக்கலாம்’ என்ற கேள்விக்கான பதிலைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். காரணம், இதையே தனது அறிக்கையிலும் நயன்தாரா குறிப்பிட்டிருந்தார்.

நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாராவைப் புகழ்கிறேன் என்ற பெயரில் ‘முன்னல்லாம் பாத்ததும் கையெடுத்து கும்புடுற மாதிரி இருக்கவங்களை தான் சாமி கேரக்டர்ல நடிக்க வைப்பாங்க. இப்பலாம் பாத்ததும் கூப்பிடுற மாதிரி இருக்கவங்களை தான் நடிக்க வைக்கிறாங்க. நயன்தாரா சீதையாவும் நடிக்கிறார்; பேயாவும் நடிக்கிறார்” என்றெல்லாம் பேசி வைத்தார். ராதாரவியின் பேச்சைக் கண்டித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் “நான் சீதையாக, பேயாக, தோழியாக காதலியாக என எப்படி வேண்டுமென்றாலும் நடிப்பேன். எந்த கேரக்டரில் நடித்தாலும், அதன்மூலம் என் ரசிகர்களை மகிழ்விக்கவேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கமாக இருக்கும். என்னை அப்படி நடிக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது” எனக் காத்திரமாக பதிலளித்திருந்தார்.

**ஆர்.ஜே.பாலாஜி ட்வீட்:**

ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி திரைப்படத்தை தயாரித்த ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம், ‘மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை NJ சரவணன் என்ற இயக்குநருடன் சேர்ந்து பாலாஜியும் இயக்குகிறார். அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவலை பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 2020ஆம் வருடம் கோடைக்கால சிறப்பாக இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share