நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மாணவர்கள், மாணவிகளுக்கென தனித்தனி வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க வேண்டும். ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து மாணவர்களுக்கு ஒவ்வொரு மாத இறுதியிலும் அலகு தேர்வு நடத்த வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு வினாத்தாளை அதில் பதிவிட்டு மாணவர்களிடமிருந்து விடைகளை எழுதி வாங்க வேண்டும். இதற்கான வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பெற்று அலகுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
**-வினிதா**
�,