தமிழக பாலில் அதிக நச்சு! ஆரோக்கியத்திலும் அரசியலா? நடப்பது என்ன?

Published On:

| By Balaji

நம் அன்றாட வாழ்க்கையில், மூன்று, அல்லது நான்கு முறை டீயோ, காபியோ குடிக்காமல் அந்நாள் நகருவதில்லை. சென்னை போன்ற மாநகரங்களில் பாக்கெட் பாலை பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். இதிலும் தனியார் பால் பாக்கெட்டுகள் தான் அதிகளவு விற்பனையாகின்றன. இந்நிலையில் நாம் அன்றாடம் குடிக்கும் பாலில் நச்சுத் தன்மை அதிகம் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் முற்றிலும் மறுக்கிறது

**

தமிழகத்தில் அதிக நச்சு

**

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அதிக நச்சுத்தன்மை உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே நேற்று (நவம்பர் 22) தெரிவித்துள்ளார். மக்களவையில், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பாலில் நச்சுத்தன்மை கலந்திருப்பதாக எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை அதிகமாக உள்ளது. குறிப்பாக நச்சுத் தன்மை அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்., உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 551 மாதிரிகளில் 88 மாதிரிகளில் இந்த நச்சுத்தன்மை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் கேரளாவிலிருந்து சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 37 மாதிரிகளில் நச்சுத் தன்மை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறியுள்ளார். மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்கள் மூலம் இந்த நச்சு உருவாவதாக சொல்லப்படுகிறது.

**

அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் செயல்

**

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டபோது அவர், ”இது பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

”மத்திய அரசின் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்தியா முழுவதும் 6000 பால் மாதிரிகளைத் தான் சோதனைக்கு எடுத்துள்ளது. நாளொன்று 155 கோடி மில்லியன் டன் பால் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் 6000 மாதிரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட மாநிலங்களை மட்டும் குறை கூறுவதை ஏற்க முடியாது.

**

அரசியல் ரீதியாக மாநிலங்களை அச்சுறுத்துதல்

**

இந்த Aflatoxin M1 நச்சுத் தன்மை பாலில் இருப்பதாக சொல்ல கூடிய மாநிலங்களில் அவர்கள் குறிப்பிடும் முதல் மூன்று மாநிலங்களைக் கவனித்துப் பார்த்தால் அது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்பது தெரிய வருகிறது. அவர்கள் குறிப்பிட்டுள்ள, தமிழ்நாடு, கேரளா, டெல்லி ஆகியவை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களாகும். எனவே இது அரசியல் ரீதியாக மாநில அரசுகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகத் தெரிகிறது.

**

2012ல் பாதுகாப்பானது, 2019ல் நச்சுத் தன்மையா?

**

2012ஆம் ஆண்டு இதே உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அதில், உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான ரசாயனம் இருக்கக்கூடிய மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அதில் பாதுகாப்பாக இருக்கக் கூடிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ஆவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழக சுகாதாரத் துறை, சென்னை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சேலம் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மத்திய அரசு ஆய்வகங்கள் ஆகியவற்றில் 2010 முதல் 2018 வரை ஆய்வு செய்யப்பட்ட பால் மாதிரிகளில் புற்றுநோய் உண்டாக்கக் கூடிய நச்சுத் தன்மை இருக்கிறதா என்றும் ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டது. இதிலும் நச்சுத் தன்மை இல்லை என்றே தகவல் வந்தது. தமிழகத்தில் தரம் குறைந்த பால்தான் விற்பனை செய்யப்படுகிறது, இந்த மாதிரியான நச்சுத் தன்மை இருக்கும் பால் உற்பத்தி ஆகவில்லை என்ற தகவலும் கிடைத்தது.

**

பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வர திட்டம்

**

இந்த சூழலில் அக்டோபர் 18ஆம் தேதி, இப்படி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட வேண்டியதன் அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுகிறது. பால் வணிக சந்தையில், ஆர்சிஇபி எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களையும் கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட இருந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்துவிடும். இந்தியப் பால் வளம் ஒட்டுமொத்தமாகச் சுரண்டப்படும். இதனால் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னரே இப்படி ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதற்காகவும், மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தி பால் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்திக்க வைக்க வேண்டும். அதன் மூலம் பால் உற்பத்தியாளர்களை நெருக்கடிக்குத் தள்ளும் நோக்கிலும் இவ்வாறு வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

**

கார்னர் செய்யப்படும் தனியார் நிறுவனங்கள்

**

இதுமட்டும் இல்லாமல் அவர்கள் கார்னர் செய்வது எல்லாமே தனியார் பால் நிறுவனங்களைத்தான். ஏனென்றால் தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிக்கைக்கும், உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட ஆய்வறிக்கைக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் பார்க்கிறோம்.

2017ல் ராஜேந்திர பாலாஜி கூறும்போது, தனியார் பால்களை குடிப்பதால் புற்றுநோய் வருகிறது என்றார். அதே தகவல்தான் தற்போது ஆய்வறிக்கையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சோதனைக்குத் தனியார் பால் மாதிரிகள் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆவின் பால் மாதிரிகள் எடுக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களிலும் தனியார் பால் மாதிரிகள் மட்டுமே சோதனைக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் தனியார் பால் நிறுவனங்களை அழித்துவிட்டு, ஆவின் நிறுவனத்தை பன்னாட்டு நிறுவனத்துக்குத் தாரை வார்க்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. எப்படிப் பார்த்தாலும் இந்த ஆய்வறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்பது தெரியவருகிறது.

**

விசாரணைக் குழுவிலும் குளறுபடி

**

இதனால் தான் இந்த ஆய்வறிக்கை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தக் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் நாங்கள் கேட்டிருந்தோம். இதற்கு உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் சுகாதாரத் துறை, கால்நடைத் துறை, உணவு பாதுகாப்பு துறை, சில ஆய்வின் அதிகாரிகள், ஆவின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய கால்நடை பல்கலை கழக அதிகாரிகள் தான் இந்த குழுவில் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவந்தது. இந்த குழுவே தவறுதலாக அமைக்கப்பட்டிருக்கிறது.

83.4சதவிகிதம் அதாவது, நாளொன்றுக்கு 1.25கோடி லிட்டர் பால் தேவையைத் தனியார்தான் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது. 16.6சதவிகிதம் வெறும் 25லட்சம் லிட்டர் பால் விற்க கூடிய ஒரு மைனாரிட்டி நிறுவனம் தான் ஆவின். இந்நிறுவனத்தில் இருப்பவர்களை உயர் நிலைக் குழுவில் போட்டால், இவர்களுக்குச் சாதகமாகத்தானே அறிக்கையைக் கொண்டு வருவார்கள். எனவே தனியார் அதிகாரிகளையும், சமூக ஆர்வலர்களையும் இந்த குழுவில் சேர்க்க வேண்டும்.

**

ராஜேந்திர பாலாஜி சொன்னதையே மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறார்

**

95 சதவிகித தனியார் நிறுவனங்கள் தரமான பாலைத்தான் விற்பனை செய்கின்றன. இந்த ஆய்வு முடிவு என்பது முற்றிலும் உள்நோக்கமுடையது, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வெளியிடப்பட்டிருக்கலாம். அன்று ராஜேந்திர பாலாஜி என்ன சொன்னாரோ, அதையேதான் தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையமும், மத்திய அமைச்சரும் சொல்லியிருக்கிறார்கள்” என்று பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share