வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால், இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின்னா், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 26 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (37), புஜாரா (43) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று(நவம்பர் 15) இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது. அபு ஜயேத் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்த புஜாரா, டெஸ்ட் அரங்கில் 23வது அரைசதம் எட்டினார். 54 ரன்கள் எடுத்த நிலையில், புஜாரா ஆட்டமிழந்தார். அதன் பின்னர், கேப்டன் கோலி களத்தில் இறங்கினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி, 2வது பந்திலேயே ‘டக்’ அவுட்டாகி, ஏமாற்றம் அளித்தார்.
இதன்பிறகு மயங்க் அகர்வாலும் ரஹானேவும் இணைந்தனர். கவனமாக விளையாடிய இந்த ஜோடி, மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு, 183 பந்துகளில் சதமடித்தார் மயங்க் அகர்வால். இது அவருடைய 3ஆவது சதமாகும். 100 ரன்கள் எடுத்த பின், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மயங்க். மறுமுனையில், ரஹானே 86 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதே சமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால், இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது இவருடைய 2ஆவது இரட்டைச் சதம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்டுகளில்: முதல் டெஸ்டில் இரட்டைச் சதமும், 2ஆவது டெஸ்டில் சதமும் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். அதனைத் தொடர்ந்து, வங்கதேசத்துக்கு எதிராக குறுகிய இடைவெளியில் மீண்டும் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார் இந்த அதிரடி ஆட்டக்காரர். ஆடுகளமும் நேற்று பேட்டிங்கிற்கு ஒத்துழைத்ததால், மயங்க் அகர்வால் பிரமாதமாக ட்ரைவ், கட், புல்ஷாட்கள் என்று அழகான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
330 பந்துகளைச் சந்தித்த மயங்க் அகர்வால் 28 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மெஹதி ஹசன் பந்தில் அபு ஜயீத்தின் அற்புதமாக கேட்ச்சில் ஆட்டமிழந்தார். வங்கதேச வீரர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 493 ரன்கள் எடுத்து, 343 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா (60), உமேஷ் யாதவ் (25) களத்தில் உள்ளனர். நேற்றைய போட்டியில் மட்டும், இந்தியா ஒரே நாளில் 407 ரன்கள் குவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோல ஒரே நாளில் 400 ரன்களை எடுத்திருப்பது, இந்திய அணிக்கு இது மூன்றாவது முறையாகும்.
�,”