மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.100 கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் (42). இவருக்குச் சொந்தமான ரசாயனக் கிடங்கு மாதவரம் 200 அடி சாலையில் உள்ளது. மருந்துகள் தயாரிக்க மூலப்பொருட்கள் வைத்திருக்கும் இந்த கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் ஆவடி, மாதவரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ரசாயன கிடங்கு என்பதாலும், காற்றின் வேகத்தாலும் எரிமலை வெடித்துச் சிதறுவது போன்று தீ பற்றுவதன் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
தண்ணீர் லாரிகள், ஸ்கை லிப்ஃட், நுரை என அணைப்பதற்குத் தேவையான அனைத்தையும் பயன்படுத்திய போதும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர சிரமமாகவே இருந்தது. ஒரு மணி நேரத்துக்குள் தீயை அணைத்து விடலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு நேற்று இரவு 7 மணிக்குப் பேட்டி அளித்திருந்த நிலையில், விடிய விடியத் தீயணைக்கும் பணி தொடர்ந்துள்ளது, சுமார் 14 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயினால் சேதமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மாதவரத்தில் நேற்று இரவு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் காற்றின் தரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**கவிபிரியா**�,