மதுரவாயல்-துறைமுகம்: இந்தியாவின் முதல் டபுள் டக்கர் பாலம்!

public

இந்தியாவிலேயே முதன் முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் அமைய உள்ளது என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்,சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும், மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலை சென்னை துறைமுகத்தில் தொடங்கி சிந்தாரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயலில் முடிவடையும். 2007ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்கோன் சிங், மதுரவாயலில் அடிக்கல் நாட்டி பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இத்திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும், இத்திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பிலே கிடந்தது. தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய திமுக அரசு பறக்கும் சாலை திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை செயலாளர் தீரஜ்குமார் இன்று(செப்டம்பர் 29) வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்படவுள்ளது.

சாலையின் முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலையாகவும், இரண்டாம் அடுக்கில் கண்டெய்னர் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் செல்லும் வகையில் நான்கு வழி சாலையாகவும் அமைக்கப்படும். எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறக்கும் சாலையில் 7 உள்நுழைவு, 6 வெளியேறும் வழிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை(DPR) மூன்று மாதத்தில் நிறைவடையும். அதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால் 3 மணி நேரமாக உள்ள கண்டெய்னர் லாரிகளின் பயண நேரம் 30 நிமிடமாக குறையும் என்று கூறப்படுகிறது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.