புதுச்சேரியில் இருந்து மது கடத்தலில் ஈடுபடும் நபர்கள்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்குப் பரிந்துரை செய்யப்படும் என கலால்துறை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுவை, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபானம், சாராயம் கடத்தலைத் தடுக்க புதுவை கலால்துறையினர் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலகத்தில் புதுவை மற்றும் தமிழக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 4) நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுவை கலால்துறை ஆணையர் அபிஜித் விஜய் சவுத்ரி தலைமை தாங்கினார். துணை ஆணையர் சுதாகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதுச்சேரி, தமிழக போலீஸ் அதிகாரிகள் (விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர்) மற்றும் மதுபான கடத்தல் பிரிவு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் கலால்துறை துணை ஆணையர் சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “வருகிற சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுவையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு மதுபானம், சாராயம் கடத்தலை தடுக்க புதுவை, தமிழக மாநில போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது புதுச்சேரியில் மதுபானம் கடத்தலைத் தடுக்க மதுபானம், சாராயக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுபானம், சாராயக்கடைகளில் தனிநபருக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே மதுபானங்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக மதுபானம் வாங்குபவர்கள் குறித்து கலால்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியவர்,
மேலும், “அதேபோல் தனியார் மதுபானத் தொழிற்சாலைகள், அரசு வடி சாராய ஆலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், அங்கு தயாரிக்கப்படும் மதுபானம், சாராயம் ஆகியவற்றின் விவரம், விற்பனை செய்யப்படும் விவரங்களை கலால்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இவற்றை கண்காணிக்க புதுச்சேரி, காரைக்காலில் தலா மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுவை மற்றும் தமிழக பகுதிகளுக்கு மதுபானம், சாராயம் ஆகியவற்றை கடத்துபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மதுபானக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்குப் பரிந்துரைக்கப்படும். மேலும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுக்கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
**-ராஜ்**
�,