தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு கவலையுடன் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலையில், 136.64 கோடி பேர் கொண்ட இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை 3.15 கோடி பேர் போட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி இரண்டு மாதங்களில் குறைந்த அளவு நபர்களே தடுப்பூசி போட்டுள்ளதாக உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான ஆனந்த் சர்மா தலைமையிலான குழு மாநிலங்களவையில் அளித்த அறிக்கையில், ‘கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெரும்பாலான மக்கள் போட்டுக் கொள்ளவில்லை. இதுவொரு தீவிரமான பிரச்சினையாக உள்ளது. அதேநேரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் புதிய வகை தொற்று பரவி வருகிறது.
எனவே, முன்கூட்டியே அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும், மத்திய ஆயுத போலீஸ் படையினர், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர் உள்ளிட்டோருக்குப் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியைப் போட வேண்டும். உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, பல நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்த மக்களுக்கும் இதே வேகத்தில் தடுப்பூசி போட்டால் இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும். இந்திய மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும், தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தவும் வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,