ஐடி ரெய்டு: அன்று காபி டே சித்தார்த், இன்று ரமேஷ்

Published On:

| By Balaji

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வராக இருந்தவருமான பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 10ஆம் தேதி வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். பரமேஸ்வராவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் முறைகேடு நடப்பதாகவும், அட்மிஷன்களுக்கு பெரிய அளவில் தொகைகள் பெறப்படுவதாகவும் வந்த தகவலையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு, தும்கூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையின் முடிவில், ரூ.4.25 கோடி கைப்பற்றப்பட்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்த சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், இதுபோன்ற ரெய்டுகள் மூலம் ஒருபோதும் தங்களை அடக்கிவிட முடியாது எனவும் எச்சரித்தனர். இந்த நிலையில் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் தனி உதவியாளர் ரமேஷ் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

**பிணமாக மீட்கப்பட்ட ரமேஷ்**

எட்டு ஆண்டுகளாக பரமேஸ்வராவிடம் உதவியாளராக இருந்த ரமேஷ், நேற்று காலை வீட்டிலிருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. ரமேஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டதால், அவரது குடும்பத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (அக்டோபர் 11) ஞானபாரதியில் அமைந்துள்ள பெங்களூரு பல்கலைக் கழக வளாகத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது காரிலிருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், “வருமான வரித் துறை சோதனையால் தான் மிகவும் தொந்தரவு அடைந்திருப்பதாகவும், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று ரமேஷ் தனது நண்பரை தொடர்புகொண்டு கூறியிருக்கிறார். எனவே, வருமான வரி சோதனையினால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் அதன் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்” எனத் தெரிவித்தனர்.

**வருமான வரித் துறையின் அச்சுறுத்தலுக்கு இரண்டாவது பலி: காங்கிரஸ்**

ரமேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தை தன்னிடம் போலீசார் தெளிவாக தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பரமேஸ்வரா, “2010ஆம் ஆண்டிலிருந்து ரமேஷ் என்னிடம் பணியாற்றி வருகிறார். அவர் ஊழியர் என்பதைவிட என்னுடைய நண்பரைப் போன்றவர். வருமான வரி சோதனை நடந்தபோது ரமேஷ் என்னுடன்தான் இருந்தார். நான் அவரிடம், ‘ஒன்றும் நடக்கப்போவதில்லை, எதற்கும் பயப்பட வேண்டாம்’ என்று தெரிவித்தேன். அவர் மிகவும் மென்மையாக பேசக்கூடியவர். எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமான ஒன்று” என்று கவலையுடன் தெரிவித்தார்.

“கர்நாடகத்தில் வருமான வரித் துறையினால் காபி டே சித்தார்த்தைத் தொடர்ந்து ரமேஷும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித் துறையின் அச்சுறுத்தலால் ரமேஷின் உயிர் பறிபோய்விட்டது. அனைத்து விதமான மனித தன்மைகளையும் பாஜக மீறிவிட்டது” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share