விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளோடு புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதியும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்தது. வாக்கு எண்ணிக்கையில் இரண்டு, மூன்று சுற்று அளவுகள் மட்டுமே எண்ணப்படும் அளவுக்கு குறைவான வாக்குகள் கொண்ட சிறிய தொகுதி என்பதால் இத்தொகுதியின் முடிவு இன்று (அக்டோபர் 24) முதலில் வெளிவந்துவிட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜான்குமார் தேர்தலில் வெற்றிபெற்றதாக முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது.
காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் களம் கண்டார். இன்று காலை ஒன்பது மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், புவனேஸ்வரனை விட காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7 ஆயிரத்து 171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வெற்றிச் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.
பதிவான வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14 ஆயிரத்து 782 வாக்குகளும், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7 ஆயிரத்து 611 வாக்குகளும் பெற்றிருந்தனர். நாம் தமிழர் வேட்பாளர் பிரவீனா 620 ஓட்டுகள் பெற்ற இத்தொகுதியில் நோட்டாவுக்கு 426 தொகுதிகள் கிடைத்துள்ளன.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்காக தன் தொகுதியை விட்டுக் கொடுத்த ஜான் குமாரை மீண்டும் எம்.எல்.ஏ.வாக ஆக்கியுள்ளார் நாராயணசாமி.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி, முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்றாக வேண்டும். அப்போது, நாராயணசாமிக்காக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ ஜான்குமாரை, விட்டுக்கொடுக்கச்சொல்லி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவைத்தார் நாராயணசாமி. அதன்பின்பு, நெல்லித்தோப்புக்கு நடந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டார்.
தனக்காக எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஜான்குமாரை, வைத்திலிங்கம் எம்.பி.யானதால் ராஜினாமா செய்த அவரது சட்டமன்றத் தொகுதியான காமராஜர் நகரில் நிற்க வைத்து வெற்றியும் பெற வைத்து தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டார் நாராயணசாமி.
�,