மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் விவசாயத்தில் லாபம் இல்லாததால் விவசாயி ஒருவர் கஞ்சா சாகுபடி செய்ய அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மோகோல் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி அனில் பாட்டீல். இவர் சோலாப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில், ‘எந்த பயிருக்கும் நிலையான விலை இல்லை. இதனால் விவசாயம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. விளை பொருட்களுக்கு மிக குறைந்த விலையே கிடைப்பதால், விவசாயம் கடினமாகி வருகிறது. சில நேரங்களில் பயிர் சாகுபடிக்கு ஆகும் செலவு தொகை கூட கிடைப்பதில்லை. சர்க்கரை ஆலைக்கு விற்கப்படும் கரும்பின் நிலுவை தொகை வரவில்லை.
தற்போது கஞ்சாவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. எனவே எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்க்க செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். தவறினால் நீங்கள் அனுமதி அளித்ததாக கருதி 16ஆம்தேதி முதல் கஞ்சா சாகுபடியைத் தொடங்குவேன்.
கஞ்சா சாகுபடி செய்ததற்காக என்மீது ஏதேனும் குற்றம் பதிவு செய்யப்பட்டால், அதற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பாகும்’ என்று கூறியிருக்கிறார்.
மாவட்ட நிர்வாகம் இந்த மனுவை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பியது. இதுகுறித்து பேசியுள்ள மொகோல் போலீஸ் நிலைய தலைமை கண்காணிப்பாளர் அசோக் சாய்கர், “விவசாயி அனுப்பிய மனு வெறும் விளம்பர யுக்தியாகும். அவர் உண்மையிலேயே கஞ்சா பயிரிடும் நடவடிக்கையில் ஈடுபட்டால் நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**
.�,