கிறிஸ் கெய்ல் வருகை: தோல்விக்கு முடிவு கட்டுமா பஞ்சாப்?

Published On:

| By Balaji

இன்று (அக்டோபர் 15) இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

‘அதிரடி மன்னன்’ கிறிஸ் கெய்ல் இந்த சீசனில் முதன்முறையாக இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் சார்பில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தன்னுடைய தோல்விப் பயணத்துக்கு பஞ்சாப் அணி முடிவு கட்டுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சீசனில் 14 ஆட்டத்தில் வெறும் ஐந்து வெற்றிகளுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி, இந்த ஆண்டு பிரமாதமாக விளையாடி வருகிறது. இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடி ஐந்தில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் கண்டு நல்ல நிலையில் உள்ளது.

டாப் 4 பேட்ஸ்மேன்களான ஆரோன் பிஞ்ச் (171 ரன்), தேவ்தத் படிக்கல் (3 அரை சதத்துடன் 243 ரன்), கேப்டன் விராட் கோலி (2 அரை சதத்துடன் 256 ரன்), டிவில்லியர்ஸ் (3 அரை சதத்துடன் 228 ரன்) ஆகியோர் தான் பெங்களூரு அணியின் தூண்கள். இவர்களில் யாராவது ஒருவர் நிலைத்து நின்று விட்டாலே வெற்றிக்கொடியை நாட்டிவிடுகிறார்கள்.

இதே போல் பந்து வீச்சில் ஓவருக்கு சராசரி 4.90 ரன் மட்டுமே கொடுத்துள்ள சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் (5 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (10 விக்கெட்), கிறிஸ் மோரிஸ், உதனா வலு சேர்க்கிறார்கள். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் பெங்களூரு அணிக்கு பீல்டிங் தான் சற்று சொதப்பலாக உள்ளது. இதுவரை 12 கேட்ச்களை நழுவ விட்டு இருக்கிறார்கள். இந்த சீசனில் அதிக கேட்ச்களைத் தவறவிட்ட அணியாகவும் உள்ளது.

ஏழு ஆட்டங்களில் ஆறில் தோற்று கடைசி இடத்தில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எஞ்சியுள்ள ஏழு ஆட்டங்களும் வாழ்வா-சாவா போராட்டம்தான். ஒன்றில் தோற்றாலும் கிட்டத்தட்ட பிளே-ஆப் கனவு தகர்ந்து விடும்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுலும் (387 ரன்), மயங்க் அகர்வாலும் (337 ரன்) சூப்பர் நிலையில் உள்ளனர். ஆனால் மிடில் வரிசையில் நிகோலஸ் பூரன் (212 ரன்) தவிர மற்றவர்களின் ஆட்டம் மோசமாக உள்ளது. அடிக்கடி வீரர்களை மாற்றி பார்த்தும் எந்த பயனும் இல்லை. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில்கூட 165 ரன்கள் இலக்கை நோக்கி ஆடியபோது ராகுல், மயங்க் அகர்வால் அரைசதம் அடித்ததுடன் முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் உருவாக்கி தந்தும் முதுகெலும்பில்லாத மிடில் வரிசையால் 2 ரன்னில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

‘அதிரடி மன்னன்’ கிறிஸ் கெய்ல் ஃபுட் பாய்சன் பிரச்சினையிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டதால் முதன்முறையாக இந்த ஆட்டத்தில் இறங்குவார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது வருகை பஞ்சாப் அணியின் தோல்விப்பயணத்துக்கு முடிவு கட்டுமா என்பதை இன்றைய ஆட்டத்தில்தான் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் அணி தனது ஒரே வெற்றியை பெங்களூருவுக்கு எதிராகத் தான் பெற்றது. அந்த ஆட்டத்தில் ராகுலின் சதத்தின் உதவியுடன் 206 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, பெங்களூருவை 109 ரன்னில் சுருட்டி மிரட்டியது. மறுபடியும் அவர்களைச் சந்திக்க இருப்பதால் பஞ்சாப் வீரர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

கெயிலின் வருகையும் சிறிய மைதானமான சார்ஜாவில் போட்டி நடப்பதும் ஒருங்கிணைந்தால் சிக்சர் மழையை எதிர்பார்க்கலாம்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share