இந்திய ரயில்வே துறையில் அனைத்துவித விசாரணைகள், புகார்கள், பயணத்தின்போதான உதவிக்கு ஒருங்கிணைந்த ஒரே தொலைபேசி உதவி எண் ‘139’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரயில்வே பயணிகள் பயணத்தின்போது தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கும், விசாரணைக்கும் பல தொலைபேசி எண்களில் பேசவேண்டியுள்ள அசெளகரியத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து தொலைபேசி உதவி எண்களும் ‘139’ என்ற ஒற்றை எண்ணில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் உடனுக்குடன் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும், தேவையான தகவலைப் பெற இயலும். பயணத்தின்போது, பயணிகள் தங்கள் அனைத்து தேவைகளுக்கும் இந்த எண்ணை நினைவில் வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் எளிது.
இந்த 139 தொலைபேசி சேவை, 12 மொழிகளில் கிடைக்கும். இதில் ரயில் பயணிகள், ஐவிஆர்எஸ் எனப்படும் பதிவு செய்யப்பட்ட குரல்வழி சேவையைப் பயன்படுத்தலாம். அல்லது நட்சத்திரக்குறியை (* – ஆஸ்டெரிஸ்க்) அழுத்துவதன் மூலம், ரயில்வே கால் சென்டர் அலுவலரை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.
இந்தத் தொலைபேசி உதவி எண்ணை அழைக்க ஸ்மார்ட்போன்தான் வேண்டும் என்பதில்லை, அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்துள்ளது.
மேலும், 139 தொலைபேசி உதவி எண்ணில், எந்தெந்த சேவைக்கு எந்தெந்த எண்களை அழுத்த வேண்டும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
எண் 1. பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிக்கு இந்த எண்ணை அழுத்தினால், கால் சென்டர் அலுவலருடன் உடனடியாக நேரடி இணைப்பு கிடைக்கும்.
எண் 2. விசாரணைகள், பிஎன்ஆர் நிலை, ரயில் வருகை, புறப்பாடு, கட்டணம், டிக்கெட் முன்பதிவு, ரத்து, விழிப்பு அலாரம், உணவு, சக்கர நாற்காலி முன்பதிவு போன்றவை.
எண் 3. கேட்டரிங் சர்வீஸ் புகார்கள்.
எண் 4. பொது புகார்கள்.
எண் 5. லஞ்சம் தொடர்பான புகார்கள்.
எண் 6. பார்சல் மற்றும் சரக்கு தொடர்பான விசாரணைகள்.
எண் 7. ஐஆர்சிடிசியால் இயக்கப்படும் ரயில்கள் தொடர்பான விசாரணைகள்.
மற்றும்
எண் 9. அளித்த புகாரின் நிலை குறித்து அறிய.
* (ஆஸ்டெரிஸ்க்) கால் சென்டர் அலுவலருடன் நேரடியாக பேச.
இந்த ஒருங்கிணைந்த தொலைபேசி உதவி எண்ணை பிரபலப்படுத்த, ‘ஒரே ரயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ என்ற சமூக ஊடக பிரச்சாரத்தையும் ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.
**-ராஜ்**
�,