ஹெச்சிஎல் டெக் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாயை போனசாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்தியாவின் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கும் விப்ரோ நிறுவனத்துடன் போட்டிப்போட்டு வரும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2020ல் 10 பில்லியன் டாலர் வருவாய் பெற்று மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு நிறுவனங்களுக்கு வருவாய் இழந்த நிலையில், ஹெச்சிஎல் டெக் அதிகளவிலான வருவாயை ஈட்டியுள்ளது.
இதன் காரணமாக ஒன் டைம் போனஸ் தொகையாக தனது ஊழியர்களுக்கு ரூ.700 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. தமிழகம், அமெரிக்கா, கனடா என உலகின் பல்வேறு நாடுகளிலும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஓராண்டு ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் பணியாற்றிய அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்சிஎல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஊழியர்கள் தான் எங்கள் நிறுவனத்துக்கு விலை மதிப்பில்லாத சொத்து. இந்த சவாலான காலத்தில் அர்ப்பணிப்புடனும் ஆர்வமுடனும் பணியாற்றினர். அதன் பலன்தான் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்துள்ளது. இந்நேரத்தில் எங்களது ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
**-பிரியா**�,