ஆளுநர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்களின் 50ஆவது மாநாடு நேற்று (24.11.2019) நிறைவடைந்தது. இதில் பழங்குடியினர் நலன் மற்றும் தண்ணீர், வேளாண்மை, உயர்கல்வி, வாழ்வதை எளிதாக்குதல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்த விஷயங்கள் தொடர்பாக தங்களின் அறிக்கைகளை ஆளுநர்களிடையே அமைக்கப்பட்ட ஐந்து குழுவினர் சமர்ப்பித்தனர்.
மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றிய குடியரசுத் தலைவர்.ராம்நாத் கோவிந்த், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் விவாதங்கள் பயனுள்ள நடைமுறைகள் என்பதை நிரூபித்துள்ளன என்றார். அமைச்சகங்கள் மற்றும் நிதி ஆயோகின் பங்கேற்பு, விவாதங்களில் கவனம் குவிப்பதற்கும் செயல் திட்டங்களை உருவாக்குவதற்கும் அவை உதவியாக இருந்தன என்று அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் முடிவுகளிலிருந்து பல பயனுள்ள தீர்வுகள் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு நவம்பர் 26 அன்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 70ஆவது ஆண்டு நாளில் குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இயக்கம் ஒன்று தொடங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அரசியல் அமைப்புச் சட்ட தினத்தை சிறப்பான முறையில் அனைத்து ஆளுநர் மாளிகைகளும் கொண்டாடும் எனவும் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்தார். மக்களிடையே அடிப்படை கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆளுநர்கள் பெரும் பங்காற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
நமது கூட்டாட்சி முறையில் ஆளுநர் பதவி முக்கியமான தொடர்புக்குரியது என்று கூறிய குடியரசுத் தலைவர், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பை உறுதி செய்வதில் ஆளுநர்களுக்குப் பங்கு உள்ளது என்றார். மாநிலத்தின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சாமானிய மக்களும் எளிதாக அணுகுவதற்கு உரியவையாகவும், கூடுதலாகக் கலந்துரையாடும் இடமாகவும், ஆளுநர் மாளிகைகளை ஆளுநர்கள் உருவாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் யோசனை தெரிவித்தார்.
நிறைவு நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
ஏற்கனவே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மக்களைச் சந்திப்பது, ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது போன்ற பணிகளில் கடுமையான விமர்சனங்களையும் தாண்டி ஈடுபட்டிருக்கிறார். குடியரசுத் தலைவரின் இந்த வழிகாட்டுதலுக்குப் பிறகு ஆளுநர் மாளிகையிலேயே மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் ஆளுநர் மாளிகை வட்டாரத்தினர்.�,