டெல்லி வன்முறையில் துப்பாக்கிகளின் ராஜ்ஜியம்!

Published On:

| By Balaji

டெல்லியில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடந்த கலவரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கைத்துப்பாக்கிகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. பொதுவாகவே திடீரென உருவாகும் கலவரங்கள் என்றால் உருட்டுக்கட்டைகள், கத்திகள் போன்றவற்றின் பயன்பாடே அதிகமாக இருக்கும். ஆனால், மிக அதிக அளவு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்தக் கலவரம் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது என்ற புகாரும் உறுதியாகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகம் டெல்லி வன்முறைக் களத்திலும், போலீஸார் வட்டாரத்திலும் விசாரித்ததை அடிப்படையாக வைத்து வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர வைக்கின்றன.

பிப்ரவரி 24ஆம் தேதி ஏட்டு ரத்தன் லால் கொல்லப்பட்டதுதான் வெளியே தெரிந்த முதல் உயிர் இழப்பாக இந்த கலவரத்தில் பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த வன்முறை சம்பவங்களில் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையின்போது குறைந்தபட்சம் 82 பேர் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்கள், காயம்பட்டவர்கள் என சுமார் 250 பேர் கொண்ட பட்டியலை டெல்லி போலீஸ் தயாரித்துள்ளது. இவர்களில் சுமார் 80க்கும் மேற்பட்டோருக்கு துப்பாக்கி புல்லட் காயங்கள் இருக்கின்றன. ஆக, மூன்றில் ஒருவர் துப்பாக்கியால் தாக்கப்பட்டிருக்கிறார்.

கலவர இடத்திலிருந்து இதுவரை 350க்கும் மேற்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ​​.32 மி.மீ, .9 மி.மீ மற்றும் .315 மி.மீ. அளவுள்ள தோட்டாக்கள் அவை. இவ்வளவு துப்பாக்கிகள் எங்கிருந்து டெல்லிக்குள் வந்திருக்கும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

அருகே இருக்கும் உத்தரப்பிரதேசத்தின் உள் மாவட்டங்களிலிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இத்தனை துப்பாக்கிகள் டெல்லிக்குள் வரும் அளவுக்கு உளவுத் துறை என்ன செய்துகொண்டிருந்தது என்ற கேள்வியும், உளவுத் துறைக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய துப்பாக்கி சப்ளை நடந்திருக்குமா என்றும் இரு வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.

“டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையின் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமையே சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 40 மணி நேரத்திற்கும் மேலான கடும் கலவரங்களுக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை மாலைதான் எல்லை மூடப்பட்டது. முதல் நாளே, எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருந்தால், வன்முறை அதிகரித்திருக்காது. டெல்லியில், துப்பாக்கி தொழிற்சாலைகள் இல்லை. டெல்லியில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சட்டவிரோத கைத்துப்பாக்கியும் மேற்கு உத்திரப்பிரதேசத்தில் இருந்துதான் வருகின்றன.

வடகிழக்கு டெல்லியில் உள்ள கிரிமினல் கும்பல்களுக்கு இவை எளிதாகக் கிடைக்கின்றன. மேற்கு உத்தரபிரதேசத்தின் மீரட், ஷாம்லி மற்றும் முசாபர்நகர் போன்ற பகுதிகளில் ஒரு நாட்டுத் துப்பாக்கி 3 ஆயிரம் ரூபாய் முதல்5 ஆயிரம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. இதே பகுதிகளில் தானியங்கி கைத்துப்பாக்கிகள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கின்றன.

திங்களன்று, ஷாருக் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர் – ஒரு போலீஸ் அதிகாரியை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது பரபரப்பாக பேசப்பட்டது. தலைமறைவாக உள்ள அந்த நபர், பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்திய வீடியோவில் சிக்கியிருக்கிறார். இவ்வாறு இரு தரப்புக்கும் தாராளமாக துப்பாக்கிகள் கிடைத்திருக்கின்றன”என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

போலீஸார் வழக்கம்போல ஏரியா ரவுடிகள், பழைய குற்றவாளிகளைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். உள்ளூர் குற்றவாளிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதிலும் விநியோகிப்பதிலும் ஈடுபட்டனர் என்பதற்கான போதுமான தொழில்நுட்ப ஆதாரங்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதனால் உள்ளூர் கிரிமினல்கள் தலைமறைவாகிவிட்டார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியின் டிரைனேஜ்களிலிருந்து இதுவரை நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி வரை மருத்துவமனை அதிகாரிகள் 29 உடல்களை அடையாளம் கண்டுள்ளனர். புல்லட் காயங்களைத் தவிர, ஒருவர் முழுக்க முழுக்க எரித்தே கொல்லப்பட்டார். ஆசிட் வீச்சு, கத்திக்குத்து, கண்ணீர் புகை குண்டுகளாலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

சில வாரங்கள் முன்பே குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததை கை கட்டி வேடிக்கை பார்த்தது போலீஸ். அதன் விளைவுதான் இவ்வளவு துப்பாக்கிகள் தலைநகரான டெல்லிக்குள் எளிதாக வந்து உயிர்களை எளிதாகக் குடித்திருக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சந்தை டெல்லி போலீஸுக்கு, உளவுத்துறைக்கும் தெரிந்தே நடந்துவருகிறது. இனியாகிலும் இந்த துப்பாக்கிச் சந்தை துடைத்து எறியப்பட வேண்டும்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share