கையில் கிடைக்கும் ரவுடிகளையெல்லாம் கொலை செய்யும் ஹீரோ. அந்த ஹீரோவை பயமுறுத்த மற்ற போலீஸாரைக் கொலை செய்யும் வில்லன். இந்த இருவரில் யார் வெற்றி பெறுகிறார் என்ற அதரப் பழைய கான்செப்டுடன் தர்பார் டிரெய்லரில் அமர்க்களமாக இறங்கியிருக்கிறார் ரஜினி.
தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பிய ரவுடிகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் போலவே, மும்பையில் பிறந்தநாள் கொண்டாடும் ரவுடிக் கூட்டத்துக்குள் புகுந்து ரஜினி வேட்டையாடும் சண்டைக் காட்சியில் தொடங்குகிறது தர்பார் டிரெய்லர். ‘அவன் ஒரு கொலைகாரன்’ என்று ரவுடிகளே பயப்படும் அளவுக்கு அடித்து நொறுக்கும் ரஜினிக்கு, பல பிரச்சினைகளைக் கொடுக்கிறார் வில்லனாக வரும் சுனில் ஷெட்டி.
சுனில் பல போலீஸ்காரர்களைத் தொடர்ந்து கொலை செய்யும் காட்சிகளைக் காண்பித்துவிட்டு, திடீரென மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டை நயன்தாரா எட்டிப் பார்ப்பது போன்ற காட்சியை வைத்திருக்கின்றனர். இது ரஜினிக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்திருப்பதைக் குறிக்கிறது. அதன்பின் தொடரும் காட்சிகளில், ‘எங்கிட்ட மோதாதே’ என ரஜினி பலரை எச்சரிப்பதும் தெரிகிறது.
டிரெய்லரின் முக்கிய அம்சங்களைக் குறிப்பதுபோல, சில காட்சிகளின்போது பின்னணி இசையைக் குறைத்து வைக்கின்றனர். அந்தக் காட்சிகள் எல்லாம் ஏற்கனவே ரஜினி படங்களில் பிரசித்தி பெற்ற காட்சிகளே தவிர, புதியதாக ஒன்றுமில்லை. தர்பார் படத்தின் சிறப்பு என்று சொல்லும் அளவுக்கான அல்டிமேட் காட்சிகள் டிரெய்லரில் எதுவுமே இடம்பெறாதது வருத்தம். அந்தக் காட்சிகளில் நடிக்கும் ரஜினியை ரசிக்க முடிகிறது. ஏற்கனவே, நடித்த காட்சியாக இருந்தாலும், இரண்டாவது முறை அதை வேறு விதத்தில் ரஜினி நடிப்பது ஒருவித மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால், ரஜினி ரீக்ரியேட் செய்யும் காட்சிகளைப் பார்ப்பதற்காகவே தர்பார் படத்தைப் பார்க்க வேண்டும் எனச் சொன்னால் எப்படி நியாயமாகும்? புதிதாகப் படத்தில் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுவதற்கான காட்சிகளும் இல்லையே என்ற ஏமாற்றமே மிஞ்சுகிறது.
‘நான் தான் சிறந்த ரஜினி ரசிகன்’ என்று நிரூபிக்கவே இந்த இயக்குநர்கள் படம் இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ரஜினி ஹீரோவாக நடிப்பதைவிட, வில்லனாக நடிக்கவே சரிபடுவார் எனச் சொல்லும்படி வசனம் வைத்திருப்பதும், நான் கெட்டவன் என ரஜினியே சொல்லிக்கொள்வதும், ரஜினியின் எந்திரன் பட சிரிப்பைத் திரும்பக் கொண்டுவருவதும் தர்பாருக்கு எப்படி உதவும் எனத் தெரியவில்லை.
சுனில் ஷெட்டி படத்தின் வில்லனாக இருந்தால், அவருடனான சண்டைக் காட்சியை இத்தனை எளிதாக டிரெய்லரில் காட்டிவிடுவார்களா?
ஒருவேளை அந்தச் சண்டைக் காட்சியில், எகிறி அடிக்கும் ரஜினியின் பராக்கிரமத்தைக் காட்டுவதற்காக அதை டிரெய்லரிலேயே விட்டுவிட்டார்களா?
கொலைகார போலீஸுக்கும், கொலைகார ரவுடிக்கும் இடையே நடக்கும் பிரச்சினையில் என்ன சோஷியல் மேட்டரை முருகதாஸ் கையாளப்போகிறார்?
இந்த மூன்று கேள்விக்கும் முருகதாஸ் சொல்லவிருக்கும் பதிலில்தான், தர்பார் திரைப்படம் என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கப் போகிறதென்பது தெரியவரும்.�,