அண்மைக்காலமாகச் சென்னை விமான நிலையத்தில் தங்கம் பிடிபடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைமுடி விக்கில் மறைத்து தங்கம் கடத்தி வந்தவர்களை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள, 5 கிலோ 500 கிராம் தங்கம், ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 பேரை சுங்க துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்துக்குத் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்கத் துறை ஆணையர், ராஜன் சவுத்ரி தலைமையிலான தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த மெகபூப் அக்பர் அலி (35), சென்னையைச் சேர்ந்த சுபைர் உசேன் (25) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்களின் தலைமுடி வித்தியாசமாக இருந்ததால் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர்கள், தங்களது தலையின் மேல் பகுதியில் முடியைச் சவரம் செய்து, அதற்கு பதிலாக ‘விக்’ வைத்து இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த ‘விக்’கை பிரித்துப் பார்த்தபோது, ‘விக்’கின் அடியில் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 595 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதேபோல் மற்றொரு துபாய் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் அகமதுல்லா (22), சேலத்தை சேர்ந்த சந்தோஷ் செல்வம் (33), சென்னையைச் சேர்ந்த அப்துல்லா (35) ஆகியோரும் இதே பாணியில் தலைமுடி ‘விக்’கில் மறைத்து வைத்துக் கடத்தி வந்த ரூ.96 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 80 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் துபாயிலிருந்து வந்த திருச்சியைச் சேர்ந்த பாலு கணேசன் (24) என்பவரது உள்ளாடைக்குள் மறைத்துக் கடத்தி வந்த ரூ.26 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் தங்கத்தையும், துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ரூ.43 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 933 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.
துபாயிலிருந்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த அன்பழகன் (24) என்பவர் காலுறை(சாக்ஸ்) மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.62 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 330 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்க வந்த தமீம் அன்சாரி (25) என்பவரையும் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
அதேபோல் சென்னையிலிருந்து சார்ஜாவுக்கு செல்ல வந்த 4 பேரின் தலைமுடி ‘விக்’குகளில் மறைத்துக் கடத்திச்செல்ல முயன்ற ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்கள் உள்பட வெளிநாட்டுப் பணத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
**-சக்தி பரமசிவன்**
�,”