கடலூர் மாவட்ட அதிமுக அமைப்பு ரீதியாக மூன்றாகப் பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (நவம்பர் 6) வெளியிட்ட அறிவிப்பில், “நிர்வாக வசதிகளுக்காக கடலூர் கிழக்கு, மேற்கு எனச் செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்புகள், ‘கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கடலூர் மத்திய மாவட்டம்’ என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடலூர், நெய்வேலி, குறிஞ்சிபாடி தொகுதிகளைக் கொண்ட மத்திய மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் சம்பத் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்துவந்தார். திட்டக்குடி, விருத்தாசலம், காட்டுமன்னார் கோயிலை உள்ளடக்கிய மேற்கு மாவட்டத்துக்கு முன்னாள் எம்.பி அருண்மொழித் தேவன் மீண்டும் மாவட்டச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.
அவர் வசம் இருந்த சிதம்பரம் தொகுதி கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், பண்ருட்டி, புவனகிரி, உள்ளடக்கிய கிழக்கு மாவட்டத்திற்கு கே.ஏ.பாண்டியன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துவருகிறார்.
இது அமைச்சர் எம்.சி.சம்பத்துக்குப் பின்னடைவாகத்தான் கருதப்படுகிறது. ஏனெனில் பிரிக்கப்படாத கடலூர் கிழக்கு மாவட்டத்தின் கீழ் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு சம்பத்துதான் மாவட்டச் செயலாளராக இருந்தார். மற்ற நான்கு தொகுதிகளும் அருண்மொழித்தேவன் வசம் இருந்துவந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர் சம்பத்துக்கும், மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி அருண்மொழித்தேவன் ஆகியோருக்கும் இடையே பனிப்போர் நிலவிவந்தது. அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த எம்.எல்.ஏ.க்கள், அவருக்கு எதிராக வெளிப்படையாகவே பேட்டியளித்தனர். விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் அமமுகவுக்குச் சென்று திரும்பினார். இவை தொடர்பாக முதல்வரிடமும் புகார் சென்றிருந்தது என்றும், அவரும் எம்.சி.சம்பத்தை [எச்சரித்திருந்தார்](https://minnambalam.com/k/2019/07/14/46) என்றும் ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம்.
மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/s8jyv82mzd
— AIADMK (@AIADMKOfficial) November 6, 2019
இந்த நிலையில் அமைச்சருக்கு செக் வைக்கும் விதமாகவே அவரிடம் இருந்த பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகள் மற்ற மாவட்டச் செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் கடலூர் மாவட்ட அதிமுகவினர்.
ஆனால், இது அருண்மொழித்தேவனுக்குதான் பின்னடைவு என்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயரைப் பயன்படுத்தி மாவட்டம் முழுவதும் அருண்மொழித்தேவன் ராஜாவாக வலம் வந்துகொண்டிருந்தார். அவர் மீது புகார்கள் செல்லவே முதல்வரே நேரடியாக அழைத்து எச்சரித்திருக்கிறார். இதனால் அவரது பொறுப்பைக் குறைக்கும் வகையில்தான் அவரது சிதம்பரம் தொகுதியைப் பிடுங்கியுள்ளனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதனிடையே மாவட்டம் பிரிக்கப்பட்டால் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வமும், முன்னாள் மாவட்டச் செயலாளரான சொரத்தூர் ராஜேந்திரனும் எதிர்பார்த்தனர். மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத நிலையில் சொரத்தூர் ராஜேந்திரனை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சத்யா பன்னீர்செல்வத்திற்கு எந்த பதவியும் வழங்கப்படாதது அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
**துணை அமைப்புகளின் நிர்வாகிகள்**
அண்மையில் அமமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தாமோதரன் அமைப்புச் செயலாளராகவும், மதுரை முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் தேர்தல் பிரிவு இணைச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சர் பா.வெ.தாமோதரன் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.�,”