68 நாடுகளுக்கு பரவிய கொரோனா-3000 பேர் பலி: இந்தியாவின் நிலை?

Published On:

| By Balaji

2019ஆம் ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கி, தற்போது வரை உலக மக்களை பெரும் பயத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நிலவரப்படி 3057ஆக உள்ளது. இந்தியாவில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு இன்று (மார்ச் 2) உறுதி செய்துள்ளது.

**உலக நாடுகள்**

கொரோனாவால், அதிகபட்சமாக சீனாவில் 2,912 பேரும், அடுத்தபடியாக ஈரானில் 54 பேரும், இத்தாலியில் 41 பேரும், தென் கொரியாவில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்ஸஸில் 700 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கப்பலில் 138 இந்தியர்களில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கப்பல் தற்போது ஜப்பான் துறைமுகத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

worldometers என்ற இணையதளம் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த இணையதளத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி உலகம் முழுவதும் 68 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 89,081 ஆக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

**இந்தியா**

கடந்த மாதம் சீனாவிலிருந்து கேரளா வந்த மாணவர்கள் மூவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் முழு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இந்நிலையில் இன்று (மார்ச் 2) மதியம் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் இந்தியாவில் தற்போது இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் டெல்லியிலும், மற்றொருவர் தெலங்கானாவில் உள்ளனர். இத்தாலி மற்றும் துபாயிலிருந்து வந்திருக்கும் இந்த இருவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

**இத்தாலியில் தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பு**

வடக்கு இத்தாலியில் உள்ள லாம்பார்டி அருகே இருக்கும் பல்கலைக் கழக நகரமான பாவியாவில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 85 இந்திய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை மீட்டு செல்லும்படி இந்திய அரசுக்கு, SOS எனப்படும் குறியீட்டை அனுப்பியுள்ளனர். பாவியா பல்கலைகழகத்தின் ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதாலும் மற்றும் 15 ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் மாணவர்கள் பயத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

”மாணவர்களில் பலர் முன்பே இந்தியா செல்லுவதற்கு டிக்கெட்டுகள் பெற்றிருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது டிக்கெட்டின் விலையும் அதிகரித்து விட்டதால் முன்பதிவும் செய்யமுடியவில்லை” என இத்தாலியில் இருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த அங்கிதா என்ற மாணவி கூறியிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது. அங்கு நிலைமை மோசமாவதற்கு முன்னதாக தங்களை மீட்டு செல்லுமாறு மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாவியாவில் சிக்கித் தவிக்கும் 85 மாணவர்களில், 25 பேர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள், 20 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், 15 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், கேரளாவைச் சேர்ந்த 4 பேர், டெல்லியைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மற்றும் ராஜஸ்தான், டேராடூன், குர்கான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இவர்களில் 65 பேர் பொறியியல் பயின்று வருகின்றனர்.

**பவித்ரா குமரேசன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share