முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அரசியல், கலை, இலக்கியம் என பல துறைகளிலும் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் என பலருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன் சாவடியிலுள்ள ஏ.சி.எஸ்.கன்வென்சன் சென்டரில் இன்று (அக்டோபர் 20) நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2481 மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, கவுரவ டாக்டர் பட்டத்தினை பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
முன்னதாக ஏ.சி.சண்முகம் பேசும்போது, “முதல்வர் அவர்களே…இந்த பல்கலைக் கழகம் உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கவில்லை. எம்.ஜி.ஆர் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும்தான் இந்த பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறது” என்று குறிப்பிட்டார்.
**பொறுப்பு கூடியுள்ளது**
இதனைத் தொடர்ந்து ஏற்புரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புக்களும் கூடியுள்ளது. பட்டம் பெற்ற மாணவ- மாணவிகள் சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள். மனித சமுதாயத்திற்கு பணியாற்ற மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும். மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும். மாணவர்கள் போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு அறிவு. கனிவு, பணிவு, துணிவு ஆகியவையும் உங்களுக்கு தேவை. பேண வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றார் அண்ணா. சமூகப் பணியாற்றச் செல்லும் நீங்கள் இதனை தவறாமல் கடை பிடிக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
தொடர்ந்து, “பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,957 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 6 சட்ட கல்லூரிகளை அதிமுக அரசு தொடங்கி உள்ளது. 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ரூ.6,800 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. உயர்க்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது” என்று முதல்வர் தனது உரையில் பட்டியலிட்டார்.
**துணை முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து**
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
�,”