தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் இறுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாக கசிந்த சம்பவம் பரபரப்பான நிலையில் மீண்டும் 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் 12 ஆம் வகுப்பு கணித தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தற்போது வினாத்தாள் வெளியாகியிருப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. அதை தொடர்ந்து, புதிய வினாத்தாள் கொண்டு 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு நடைபெற்றது. மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார்.
இதனிடையே தற்போது 10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வைக்கும் கட்டுப்பாட்டு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, அது செயற்பாட்டில் இருக்க வேண்டும். தொடர்ந்து காவலர் பணியில் இருக்க வேண்டும். மேலும் இரட்டை பூட்டுகள் கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பாளராக இருக்கக் கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.