அமைச்சரவை ரகசியங்கள் லீக்: அதிர்ச்சியில் முதல்வர்!

Published On:

| By Balaji

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் 10 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் முடிந்து அவர் இன்று சென்னை திரும்பும் நிலையில், தமிழக அமைச்சரவையின் கூட்டம் நாளை (நவம்பர் 19) தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி வகைப்பாடுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே சில அமைச்சர்கள் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடலாம் என்று முதல்வரிடம் கோரிக்கைகள் வைத்து வந்தனர். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பற்றியே முதன்மையான விவாதம் இருக்கும் என்கிறார்கள்.

இதற்கிடையே நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரத்தினர், “தமிழக அமைச்சரவைக் கூட்டம் என்றால் மிகுந்த இறையாண்மை வாய்ந்தது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படுகிற முடிவுகளைப் பற்றி அமைச்சர்கள் தங்கள் துறைச் செயலாளர்களிடம் தவிர யாரிடமும் விவாதிக்க முடியாது. துறைச் செயலாளர்களிடம்கூட திட்டங்கள் தொடர்பான கேபினட்டின் முடிவு பற்றிதான் கூற முடியும். ஆனால், கேபினட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் பெரும்பாலும் வெளியே போவது கிடையாது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கேபினட் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றியெல்லாம் அமைச்சர்கள் மூச்சுவிட மாட்டார்கள்.

ஆனால், இந்த ஆட்சியில் அமைச்சரவையில் நடக்கும் முக்கிய விவாதங்கள் பாஜக பிரமுகர்களுக்கு அன்றே தெரியப்படுத்தப்படுகின்றன என்று முதல்வருக்குத் தகவல் சென்றுள்ளது. அமைச்சரவையில் மாநில நலன் ரீதியான அரசியல் ரீதியான விஷயங்களும் பேசப்படுவதுண்டு. அதுபோன்ற விஷயங்களும் விவாதங்களும் பாஜக தலைவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக முதல்வருக்குத் தெரியவந்துள்ளது. இந்தச் சர்ச்சையில் பாஜகவுக்கு நெருக்கமான ஓர் அமைச்சர் மேல் முதல்வரின் சந்தேகப் பார்வை படிந்திருக்கிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி பொதுவான ஓர் எச்சரிக்கையைக்கூட வெளிப்படுத்தலாமா என்று கருதுகிறார் முதலமைச்சர்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

இதுபற்றி சில அமைச்சர்கள் தரப்பில், “அமைச்சரவைக் கூட்ட ரகசியங்களை பாஜகவுக்குச் சொல்வது அமைச்சர்களா, அதிகாரிகளா என்பது முதல்வருக்குத் தெரியும்” என்கிறார்கள்.

அமைச்சர்கள் வழியாகவோ, அதிகாரிகள் வழியாகவோ தமிழக அமைச்சரவைக் கூட்டத்தின் ரகசியங்கள் வேறு இடங்களுக்குச் செல்வது கோட்டை வட்டாரத்தில் நடக்கும் இந்தப் பேச்சுகளின் மூலம் தெளிவாகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share