சிவசேனா குறித்து குழப்பும் சரத் பவார்: சோனியாவுடன் சந்திப்பு!

Published On:

| By Balaji

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்துவரும் நிலையில், சரத் பவார் அளித்த பேட்டியால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தும், மூன்று கட்சிகளால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புதிய கூட்டணி உருவாவது தொடர்பாக காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) – சிவசேனா கட்சிகள் இடையே குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை(நவம்பர் 17) புனேவில் நடத்தியது. கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலக் கட்சித் தலைவர் ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார், தனஞ்சய் முண்டே, எம்.பி.க்கள் சுப்ரியா சுலே, சுனில் தட்கரே போன்றோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சரத் பவார் பங்கேற்க வருகை தந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவரிடம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கப் போவதாகக் கூறி வருகிறது என்று கேட்டபோது, சரத் பவார் அப்படியா, பேச்சு நடத்துகிறார்களா?” எனக் கேட்டார்.

என்சிபியுடன் சிவசேனா பேச்சு நடத்துவது உண்மையில்லையா என்று நிருபர்கள் கேட்டபோது, சரத் பவார், ” சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள், என்சிபி-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். அவர்கள்(பாஜக-சிவசேனா) அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்” என்று தெரிவித்தார்.

சரத் பவாரிடம் மீண்டும் நிருபர்கள், “ஆனால், சிவசேனா சரத் பவாருடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று கூறிவருகிறார்களே?” என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் ஒரே வார்த்தையில், “அப்படியா” எனக் கேட்டவாறு அங்கிருந்து நகர்ந்தார். இந்தியாவில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக கருதப்படும் 79 வயதான சரத் பவார் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று கட்சிகளும் இணைந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை இறுதி கட்டத்தில் கொண்டு சென்றுள்ள நிலையில், சரத் பவாரின் இந்த பதில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, இன்று மாலை செய்தியாளர்களிடம் “நான் ஒரு சமரசம் குறித்து சஞ்சய் ராவத்திடம் பேசினேன். நான் அவருக்கு 3 ஆண்டுகள் (பாஜகவைச் சேர்ந்த முதல்வர்) மற்றும் 2 ஆண்டுகள் (சிவசேனாவிலிருந்து முதல்வர்) என்ற ஃபார்முலாவை பரிந்துரைத்தேன். அதற்கு அவர் பாஜக ஒப்புக் கொண்டால் தான், சிவசேனா அதைப் பற்றி சிந்திக்க முடியும் என்று கூறினார். இது குறித்து பாஜகவுடன் கலந்துரையாடுவேன்” எனக் கூறினார்.

இதனால் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் சரத் பவார், சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுப்பட்டார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்து, மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முட்டுக்கட்டை குறித்து விவாதித்ததாக கூறினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா சோனியா-பவார் சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “சரத் பவார் இன்று காங்கிரஸ் தலைவரை சந்தித்து மகாராஷ்டிராவின் நிலைமை குறித்து விளக்கினார். ஓரிரு நாட்களில் என்சிபி – காங்கிரஸின் பிரதிநிதிகள் டெல்லியில் சந்தித்து இதை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வழி குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share