பிக் பாஸ் சீசன் 3 முடிந்துவிட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சி விட்டுச்சென்றதும் கற்றுக்கொடுத்ததும் ஏராளம்.
மக்களின் மனம்கவர்ந்த முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோரில் ஏழு கோடிக்கும் மேலான ஓட்டுக்களைப் பெற்று முகேன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டை காலி செய்து வெளியேறியதிலிருந்து, 50 லட்ச ரூபாய் பரிசை முகேனுக்கு வழங்கியது வரையிலும் நடைபெற்ற அத்தனையும் பிரமாண்டம். எனினும், அதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்ச்சிகள், நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தன. அதைப்பற்றி சொல்ல வருகிறார். உங்கள் ஸ்பிளாக்கர்.
வணக்கம்! வணக்கம்! வணக்கம்!
முழுக்க முழுக்க பாசிட்டிவான விஷயங்களைப் பத்தி எழுதவே, இந்த கடைசி பிக் பாஸ் ஆர்டிக்களைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
**தர்ஷன்**
தர்ஷன் எலிமினேட் ஆனபோது எத்தனையோ எதிர்க்குரல் கிளம்புச்சு. அது பிக் பாஸ் செட்டுக்கு கேட்டுச்சோ இல்லையோ… ஆழ்வார்ப்பேட்டை பாலத்துக்குக் கீழே நல்லாவே எதிரொலிச்சிருக்கு. அதனாலதான், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலமா உருவாகப்போகும் படத்துல நடிப்பதற்கான வாய்ப்பை தர்ஷனுக்குக் கொடுத்து கமல் தன்னை நியாயப்படுத்திக்கிட்டார். உண்மையில் சொல்லப்போனால், டைட்டில் அடிச்ச முகேனுக்குக்கூட இதுவரைக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கல.
**பிக் பாஸ்**
முந்தைய சீசன்ல மிஸ் ஆன மிக முக்கியமான விஷயம்… பிக் பாஸ் குரலைக் கேட்டாலே கண்டெஸ்டன்ட்ஸ் அலறி அடிச்சு ஓடுனதுதான். ஆனால், இந்த சீசனில் அது தலைகீழா மாறி, பிக் பாஸ் குரல் கேட்டதும் ‘வா மச்சான், இந்தப் பக்கம் உக்காரு’ என்பது மாதிரியான ஒரு சூழலை உருவாக்குனது உள்ளே வந்த 17 கண்டெஸ்டன்ட்களும்தான்.
கடைசி நாளில், ‘சிஷ்யா ஐ வில் மிஸ் யூ’ என்றும், ‘முகேன்… இந்த உலகத்துல அன்பு என்னிக்கும் அநாதை ஆனது இல்லை’ என்று சொன்னதும் அல்டிமேட்.
ஏதோ ஒரு கம்ப்யூட்டர் குரல் நமக்குக் கட்டளையிடுவதா இல்லாமல், அந்த பிக் பாஸ் குரலுக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, அந்தக் குரல் எதையெல்லாம் செய்யக்கூடாதோ, அதையெல்லாம் ரசிக்கும்படி செய்ய வெச்சதுல முக்கிய பங்கு உள்ளே இருந்த ‘பாய்ஸ்’ டீமுக்கு இருக்கு.
**கமல் எனும் கலைஞன்**
“நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன் ரசனை
மிகுந்த ரகசிய கவிஞன்”
இது வைரமுத்து எழுதிய வரி. கமல் இப்படி வாழ்றாரேன்னு, வைரமுத்து இப்படி எழுதினாரா… இல்லை, அவர் எழுதினதை உண்மையாக்க இவர் வாழ்றாரான்னு எதிர்கால யூத்களால் புரிஞ்சிக்க முடியாத அளவுக்குத் தன்னையும், தான் செய்யும் தொழிலையும் ரசிக்கக்கூடிய ஒரு கலைஞனால் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இனி யார் தொகுப்பாளரா வந்தாலும் கமலை மிஞ்ச முடியாது.
முகேனையும் சாண்டியையும் ‘காரதம்’ (கார் + ரதம்) ஏத்தி கூட்டிட்டு வரும்போது டான்ஸ் ஆடுனதா இருக்கட்டும், ரெண்டு பேர் கையையும் இவர் புடிச்சிக்கிட்டு, அவங்க கையை தூக்குனது மாதிரி பாவலா செய்ததாகட்டும், கமலுக்குள் இருக்கும் கலை தாகம் தீரவே தீராது என்கிறதையே காட்டியது. மைக்ல பேச கஷ்டமா இருக்குன்னு லாலாவை கமலிடம் சாண்டி கொடுத்ததும், அவர் முகத்தைப் பாவமா வெச்சுக்கிட்டு குழந்தையைத் தட்டிக்கொடுத்துக்கிட்டு நின்ற காட்சி பலருக்கு ஃபேவரைட்.
**முகேன் ராவ் எனும் MGR**
முகேன் பிக் பாஸ் வீட்டுக்குள்ள நுழையும்போது தன்னை, MGR என்றே அறிமுகம் செய்தார். அப்ப சோஷியல் மீடியாவில் எழுதுனவங்க பலரும், ‘ஆமா இவர் பெரிய MGR. முதல்ல ரெண்டு வாரம் இங்க தாக்குபுடிக்க முடியுதான்னு பாரு’ என்றார்கள். ஆனால், இங்கே இப்ப ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கு.
பாட்டு பாடுறதா இருக்கட்டும், நடனமானதா இருக்கட்டும், மத்தவங்களை சந்தோஷப்படுத்த சின்னச் சின்ன பொருட்களை செய்றதா இருக்கட்டும், அடுத்தவங்களுக்கு தேவை இதுதான்னு தெரியுறதே பல இடங்களில் கஷ்டமா இருக்கு. மக்களுக்குத் தேவையான பொழுதுபோக்கை நேர்மையாகக் கொடுத்த முகேனுக்கு என்ன தேவைன்னு மக்களுக்குச் சரியா தெரிஞ்சிருக்கு. அதை அவங்க கொடுத்திருக்காங்க. இது எல்லாவற்றையும் தாண்டி, மலேசிய தமிழன்னு அறிமுகப்படுத்தப்பட்ட முகேனை, ‘தமிழன்னாலே தமிழன்தான். இது என்ன மலேசியத் தமிழன், மதுரைத் தமிழன்னு பிரிச்சி பேசிக்கிட்டு’ என்று சொல்வது போல டைட்டில் வின்னராக செலக்ட் செய்திருக்கிறார்கள். உலகத்தில் அன்பு அநாதையாகாது என்பது போல, தமிழனும் அநாதையாவது இல்லை முகேன். வாழ்த்துகள்.
**- ஸ்பிளாக்கர்**�,”