அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் சிக்கிய அனுராதாவுக்கு இடது கால் அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் தேதி கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து அனுராதா என்ற இளம்பெண் படுகாயமடைந்தார். இரு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் ராயல் கேர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுராதாவின் தாய் சித்ராவும்(54), அவரது குடும்பத்தினரும் தங்கள் பிள்ளை நலமுடன் திரும்ப வேண்டும் என்று ஐசியு முன்பு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட அனுராதாவின் இடது கால் முட்டிக்கு கீழ் பகுதி, நேற்று முன்தினம் இரவு 11மணிக்கு மேல் அகற்றப்பட்டுள்ளது. மேலும் வலது காலிலும் மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் தற்போது செய்ய முடியாது என்றும் அனுராதா உடல்நலம் தேறி வரவேண்டும், 10 நாட்களுக்கு பிறகுதான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதாவுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பிபிஏ பட்டதாரியான அவர், சமீபத்தில் பெற்றோருடன் சென்னையிலிருந்து பொருளாதார சூழ்நிலை காரணமாகக் கோவை சிங்காநல்லூருக்கு இடம்பெயர்ந்துள்ளார், அங்குள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் உதவி கணக்காளராக சில வாரங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார்.
அனுராதாவின் குடும்பம், அவரது வருமானத்தை மட்டுமே நம்பி இருந்துள்ளது. தற்போது அதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினரான பாலா தெரிவித்துள்ளார், மேலும், அனுராதாவின் உடன் பிறப்பு, அவரது 12 வயதில் இறந்துவிட்டதாகவும், அந்த குடும்பம் பல இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
“எங்கள் மகள் முழுமையாக குணம் பெற உதவுங்கள்” என்று அவரது தாயார் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
�,