அண்ணா பல்கலைக்கழகச் சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக்கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே, பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், இதுபோன்ற முக்கிய முடிவை எடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதத் துணைவேந்தர் சூரப்பா என்ன மற்றொரு முதல்வரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல் துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.
மேலும், “இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று (அக்டோபர் 12) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த சூரப்பா, “அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நிலை சிறப்புத் தகுதி பெறவே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. உயர்நிலை தகுதி கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். தமிழக அரசும் அண்ணா பல்கலைக்கழகமும் ஒருங்கிணைந்துதான் பணியாற்றுகிறோம். அப்படி இணைந்து பணியாற்றினால்தான் உயர் அந்தஸ்து கிடைக்கும். அரசுடன் எந்தப் பனிப்போரும் இல்லை. பேராசிரியர்கள், தமிழக அரசு, அமைச்சர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” என்று விளக்கம் அளித்தார்.
தனிப்பட்ட முறையில் தான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதவில்லை எனத் தெரிவித்த சூரப்பா, “மாநில அரசுக்குத் தெரியாமல் நான் எந்த கடிதத்தையும் மத்திய அரசுக்கு எழுதவில்லை. மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு ஆகியவை மாநில அரசின் கைகளில் இருக்கிறது. தற்போது என்ன நடைமுறை இருக்கிறதோ அதுதான் தொடரும். 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாகக் கேள்வி எழுந்தபோது, மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நான்தான் முதலில் கடிதம் எழுதினேன். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை ஏற்றால் மட்டுமே உயர் சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.
அண்ணா பல்கலையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை ஒப்புதலுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
**எழில்**�,