திருப்பதி: ஓராண்டுக்குப் பின்னர் ரூ.5.21 கோடி காணிக்கை!

Published On:

| By Balaji

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் (மார்ச் 19) ஒரே நாளில் ரூ.5.21 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப கோயிலில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீவாரி உண்டியலில் பணம் மற்றும் நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். சிலர் கோயிலுக்குப் பணம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். மேலும், பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 19) 52,087 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதில், 25,466 பக்தர்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர். மேலும், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ஒரேநாளில் ரூ.5.21 கோடி காணிக்கையாகக் கிடைத்தது.

கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு திருப்பதியில் பக்தர்கள் வருகையும், காணிக்கையும் குறைந்திருந்தது. அதன்படி கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.21 கோடியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்கள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் காணிக்கை தொகை இன்னும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share