இந்தியாவில் மா சாகுபடியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் குண்டு, பங்கனப்பள்ளி, நடுசாலை, செந்தூரா உள்பட பல்வேறு வகையான மாம்பழங்கள் அதிக அளவில் விளைகிறது. இந்த மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக சேலம் மாவட்டத்தில் பங்குனி மாதத்தில் தொடங்கும் மாம்பழ சீசன் சித்திரை மாதத்தில் இருந்து உச்சம் பெறும்.
இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மாம்பழங்கள் வரத்து குறைவாக உள்ளது ஆனால் கடந்த வாரத்தை விட தற்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடை வீதி, ஏற்காடு பிரதான சாலை, பழக்கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. வெளியூர்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஆன்லைன் விற்பனையும் சூடு பிடித்துள்ளது. இதனால் விலையும் கடந்த வாரத்தை விட சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் மாம்பழங்கள் உற்பத்தியாகிறது. சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலைப்புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகாண்டாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளிலும் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் விளையும் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
கடந்த வாரம் 15 டன்னாக இருந்த மாம்பழ வரத்து படிப்படியாக உயர்ந்து தற்போது சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 25 டன்னுக்கும் மேலாக வருகிறது. இதனால் விலையும் தற்போது குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
.