தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 16) 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வழக்கமாக மாலை நேரங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அல்லது செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள்.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் நிலவரம் குறித்து அறிவித்தார்.
அவர் கூறுகையில், “34 ஆயிரத்து 841 நோயாளிகள் தீவிர தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். தனிமைப்படுத்தல் முடித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 326 ஆக இருக்கிறது.
மொத்தம் 17 ஆயிரத்து 835 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 16 ஆயிரத்து 452 பேரின் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன. 1,383 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன.
நேற்று வரை 1242 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 25 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1267 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு நோய் பரவலைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக 25 பேருக்குத் தான் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் பூஜ்ஜியத்தை எட்டும். ஏற்கனவே 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோய்த் தொற்று ஏற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும். இதில் 6 பேர் அரசு மருத்துவர்கள், 5 பேர் தனியார் மருத்துவர்கள், தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தலா ஒருவர் அடங்குவர் . சிகிச்சை அளிக்கும் போது தமிழகத்தில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் மருத்துவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
-கவிபிரியா