ஆயுதபூஜையை முன்னிட்டு,நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையுடன், சனி,ஞாயிறுக்கிழமை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் படிப்பு, வேலை காரணமாக சென்னையில் தங்கியிருப்பவர்கள் நேற்றிலிருந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆரம்பித்துள்ளனர். இந்த பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அதை மீறும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.
அதன்படி, நேற்று(அக்டோர்பர் 13) ஒரே நாளில் அரசு சிறப்பு பேருந்து உட்பட மொத்தம் 5 ஆயிரத்து 422 அரசு பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 900 பேர் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், திருச்சி, சேலம் , மதுரை போன்ற மாவட்டங்களுக்கு அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதுபோன்று, சொந்த ஊரிலிருந்து மீண்டும் சென்னை வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்றும் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், சென்னையிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் விடுமுறை காரணமாக பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் இன்று காலை முதலே சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ளது.
**-வினிதா**
�,