2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 23 நீர்வழிப்பாதைகளைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
கடல் வழிப்பாதைகள் தொடர்பான கருத்தரங்கம் நேற்று (மார்ச் 2) டெல்லியில் நடைபெற்றது. அதை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் எதிர்கால தலைமுறைக்கு ஏற்றார்போல கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இதில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.
இந்திய துறைமுகங்களில் சரக்குகளை ஏற்ற வரும் கப்பல்களும், இறக்க வரும் கப்பல்களும் நீண்ட நாட்கள் காத்துக்கிடக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதில் விரைவாக சரக்குகளைக் கையாள இன்னும் விரிவான திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. துறைமுகங்களை மேம்படுத்துதல், சரக்கு இருப்பு வைக்கும் வசதிகளை அதிகப்படுத்துவது போன்றவை முக்கியமானதாகும்.
துறைமுகத்துறையில் தனியார்களையும் முதலீடு செய்வதற்கு நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். இந்தியாவில் கப்பல் கட்டும் தொழிலை அதிகப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் கப்பல்கள் பழுது நீக்கும் மையங்களை அதிக அளவில் உருவாக்கவும், திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். இந்தத் துறையில் உலக அளவில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கும்” என்று கூறியவர்,
மேலும், “இந்தியாவில் நீர் வழிப்பாதைகளை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் 23 நீர்வழிப்பாதைகளைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீர் வழிப்பாதைகள் போக்குவரத்துக்கு மிக உதவுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கின்றன.
கலங்கரை விளக்கங்களை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தமுள்ள 189 கலங்கரை விளக்கங்களில் 78 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா மையமாக மாற்றப்படும்” என்று தெரிவித்தார்.
**-ராஜ்**
�,